மஹாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேல் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க கடந்த 8 ஆண்டுகளில் முயற்சிகளை மேற்கொண்டோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைக்கப்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்து
பிரதமர் நரேந்திர மோடி
பேசியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நாட்டிற்கு சேவை செய்ய துவங்கி 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த ஆண்டுகளில், ஏழைகளுக்கு சேவை, சிறந்த நிர்வாகம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் 100 சதவீதம் மக்களை சென்றடைவதற்கு அரசு ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறது. அனைத்து குடிமக்களுக்கும் அனைத்து வசதிகளை அளிக்கும் போது, பாகுபாடு முடிவுக்கு வருவதுடன், ஊழலுக்கான வாய்ப்பு குறையும்.
கடந்த 8 ஆண்டுகளில், மஹாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேல் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டோம். ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை மஹாத்மா காந்தி விரும்பினார். அங்கு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஒரு வாழ்க்கை முறையாகும்.
கோவிட் பெருந்தொற்று துவங்கியதும், ஏழைகள் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டனர். மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்குவதற்கான இடங்களை நாங்கள் அமைத்தோம். பெண்கள் நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ள, ஜன்தன் கணக்குகளுக்கு நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது. விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கும் பணம் நேரடியாக செலுத்தப்பட்டது. பெண்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் அளிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைகளுக்கான சவால்கள் அதிகரித்த போது, ஏழைகள் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்வதற்கு எளிதாக வழிவகை செய்யப்பட்டது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இலவச தடுப்பூசி உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு பிரதமர் பேசினார்.