பெங்களூரு: விவசாய ட்ரோன்கள் தயாரிப்பில் பெரும் சாதனை படைத்து வரும் பெங்களூரைச் சேர்ந்த ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது.
உலக அளவில் ட்ரோன்கள் என்பது முதல்கட்டமாக ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டன. அதன் பிறகு பல்வேறு துறைகளிலும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ட்ரோன்கள் மூலம் நிலம், சொத்து அளவீடு செய்யப்படுகிறது. மருந்துகள் விநியோகம் செய்யப்படுகிறது.
கரோனா தடுப்பூசிகள் தொலைதூர பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்கு ட்ரோன்கள் பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டன. இந்தவரிசையில் தற்போது வேளாண் பணிகளுக்கு ட்ரோன்கள் முழுமையாக பயன்படுத்தும் திட்டம் வேகமெடுத்துள்ளது.
வரும் காலங்களில் அதிக திறன் கொண்ட ட்ரோன்களின் உதவியுடன், விவசாயிகள் தங்கள் வயல்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், பூக்களை சந்தைகளுக்கு அனுப்பலாம். ட்ரோன்கள் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்கள் விரைவாக சந்தைக்கு கொண்டு செல்ல முடியும்.குளங்கள், ஆறுகள் மற்றும் கடலில் இருந்து நேரடியாக சந்தைக்கு மீன்களை அனுப்ப முடியும் என கணிக்கப்படுகிறது.
ட்ரோன் ஸ்டார்ட்-அப்
நாட்டில் தற்போது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் இந்த எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2026ம் ஆண்டில் ட்ரோன்களுக்கான சந்தை மிகவேகமாக வளர்ச்சி அடைந்து ரூ.30 ஆயிரம் கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்யத் தடை விதித்தது. இந்தத் தடைக்குப்பின், இந்தியாவில் ட்ரோன் தயாரிப்புக்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் பெங்களூரைச் சேர்ந்த ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வேளாண் துறைக்கான ட்ரோன்களை, ரோபாட்களை தயாரிக்கும் சிறப்பு பெற்ற நிறுவனமாகும். குறிப்பாக பயிர்காப்பு உபகரணங்கள், பயிர்கள் வளத்தை கண்காணித்தல், விளைச்சலைக் கண்காணிக்கும் கருவிகள், புள்ளிவிவர ஆய்வு, செயற்கை நுண்ணறிவு போன்றவை தயாரிப்பில் இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது.
விவசாயத் துறைக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி பயிர் பாதுகாப்பு சேவைகள், பயிர் ஆரோக்கியம், துல்லியமான விவசாயம் மற்றும் மகசூல் கண்காணிப்பு ஆகியவற்றை ட்ரோன் மூலம் ஜெனரல் ஏரோநாட்டிக் நிறுவனம் செய்து சாதனை செய்து வருகிறது.
இந்தநிலையில் தற்போது அதானி நிறுவனம் ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி டிபன்ஸ் சிஸ்டம் அண்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆனால், எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கு இடையே கையொப்பமானது என்ற விவரம் வெளியாகவில்லை. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்த உள்ளது.
ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் புர்மான் கூறியதாவது:
எங்கள் நிறுவனத்துடன் அதானி குழுமம் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இது அடுத்தக் கட்டத்துக்கு எங்கள் நிறுவனத்தை நகர்த்தும். அதானி குழுமத்துடன் இணைந்து இந்தியாவை ட்ரோன்களுக்கான தளமாக மாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.