இசையமைப்பாளருக்கு கேரள அரசு விருது : குஷி படக்குழு மகிழ்ச்சி

மகாநடி படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் இணைந்து நடித்து வரும் படம் குஷி. இயக்குனர் சிவா நிர்வனா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு மலையாள திரையுலகைச் சேர்ந்த வளர்ந்து வரும் இசையமைப்பாளரான ஹேசம் அப்துல் வகாப் என்பவரை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்தபோது பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.

இவர் இந்த வருடம் மோகன்லாலின் மகன் பிரணவ் நடிப்பில் வினித் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான ஹிருதயம் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர். அந்தப்படத்தில் சிறிதும் பெரிதுமாக இடம்பெற்ற 11 பாடல்களையும் ரசிகர்கள் மனதிற்கு பிடிக்கும்படியான வகையில் கொடுத்திருந்தார் ஹேசம் அப்துல் வகாப். குறிப்பாக ஒணக்க முந்தரி, தர்ஷனா ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. அதிலும் தர்ஷனா என்கிற பாடல் யூ டியூபில் ஒரு மில்லியன் லைக்குகள் பெற்ற முதல் மலையாள பாடல் என்கிற சாதனையையும் செய்தது.

இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கேரள அரசு விருது பட்டியலில் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது ஹிருதயம் படத்தில் இசை அமைத்ததற்காக ஹேசம் அப்துல் வகாப்புக்கு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து குஷி பட குழுவினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.