டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (59). இவர் 2004-05-ம் ஆண்டில் என்.டி. திவாரி அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். தற்போது இவர் ஹால்தானி பகுதியில் மகன் அஜய் பகுகுணா, மருமகள், பேத்தியுடன் வசித்தார்.
கடந்த வாரம் பேத்தியை மானபங்கம் செய்ய முயன்றதாக இவரது மருமகள் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை போலீஸாருக்கு போன் செய்து விட்டு மாடியிலுள்ள தண்ணீர் தொட்டியில் ஏறி நின்றார். இதைத் தொடர்ந்து தனது மார்பில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராஜேந்திர பகுகுணாவின் மகன் அஜய் கூறும்போது, “எனக்கும் என் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டை, காரணமாக தந்தை மீது பொய் குற்றச்சாட்டை மனைவி சுமத்திவிட்டார். பணத்தை பறிக்க அவர் மீது வீண்பழி சுமத்திவிட்டார்” என்றார். இதையடுத்து மருமகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை தொழிலாளராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்து அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா என்பது குறிப்பிடத்தக்கது.