சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத் திருத்தம் தொடர்பாக புதிய விதிகளை உருவாக்க குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தொடர்பாக ‘தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998’ நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதைத் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ‘தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்தச் சட்டம் 2022’ விரைவில் அமல்படுத்தபடவுள்ளது.
இந்நிலையில், இதற்கான புதிய விதிகள் மற்றும் துணை விதிகளை உருவாக்க குழுக்கள் அமைத்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி, வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு, தேர்தல் விதிகள், மன்ற விதிகள், சேவை விதிகள், கணக்கு விதிகள், விரி விதிப்பு மற்றும் உரிம அனுமதி தொடர்பான விதிகள், கட்டிட விதிகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் விதிகள், சுகாதார விதிகள், திடக் கழிவு மேலாண்மை விதிகள் ஆகிவயற்றை உருவாக்க குழுக்கள் அமைத்து நகராட்சி நிர்வாக ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுக்கள் வரும் ஜூன் 10-ம் தேதிக்குள் தங்களின் அறிக்கையை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.