இந்தியாவில் மாற்றுத்திறனாளி குழந்தை பயணிக்க அனுமதி மறுத்த விமான நிறுவனத்திற்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி ராஞ்சி-ஐதராபாத் விமானத்தில் பயணிக்க மாற்றுத்திறனாளி சிறுவன் மற்றும் அவரது பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
குறித்த சிறுவன் அச்சத்தில் இருந்ததால் அவர்கள் விமானத்திற்குள் நுழைய வேண்டாம் என முடிவு செய்ததாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது.
இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விசாரணையை துவங்கியது.
Photo Credit: IANS
விமான நிறுவனம் அளித்த பதில் DGCA-வுக்கு திருப்திகரமாக அமையவில்லை. எனவே இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க முடிவு செய்தது.
அதன்படி, இண்டிகோ நிறுவன ஊழியர்களால் சிறப்பு குழந்தையை கையாள்வதில் குறைபாடு இருந்துள்ளது. இதனால் நிலைமை மோசமாகியது. விமானத்தின் ஊழியர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட தவறிவிட்டனர் என தான் வெளியிட்ட அறிக்கையில் DGCA தெரிவித்தது.
மேலும், இந்த விடயங்களை கருத்தில் கொண்டு விமான சேவை விதிகளின்படி இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தெரிவித்தது.