தன் மே க்யூயானும் அவரது நண்பர்களும் சமீபத்தில் சிங்கப்பூர் அதிபருக்கு கடிதம் ஓன்றை எழுதியிருந்தனர். அக்கடிதத்தில், ‘44 கிராம் ஹெராயின் (மூன்று டேபிள்ஸ்பூன் அளவு) கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் உள்ள தட்சிணா மூர்த்தியின் மரண தண்டனை தடை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சிங்கப்பூரில் மரணத் தண்டனைகளுக்கு எதிரான போராட்டங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர் தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு போதை பொருட்கள் கடத்தல் குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. அறிவுசார் குறைபாடுடைய நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சிங்கப்பூரில் இளைஞர்கள் பலரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தன. சர்வதேச அளவில் எதிர்ப்புக் குரல்களும் பதிவு செய்யப்பட்டன.
நாகேந்திரன் அறிவுசார் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என அவர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், அதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இறுதியில் கடந்த மாதம் 27-ஆம் தேதி நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், நாகேந்திரனுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை, சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு எதிரான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் நீதியின் பெயரால் எவ்வளவு கடுமையான தண்டனைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை உணர்ந்து இளைய தலைமுறையினர் பலரும் மரண தண்டனைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.அவைதான் சமூக வலைதளங்களில் எதிரொலிக்கிறது. அதுவே தன் மே க்யான் எழுதிய கடிதமும். நாகேந்திரனுக்கு அடுத்தாக மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தவர்தான் மலெசியத் தமிழரான தட்சிணா மூர்த்தி. அவரைக் காக்கும் பொருட்டே இப்போது போராட்டம் வலுத்துள்ளது.
தக்சிணா மூர்த்தியின் மரண தண்டனையை எதிர்த்து சிங்கப்பூர் அதிபருக்கு கடிதம் எழுதிய தன்னின் சமூக வலைதள பக்கங்களில் ”முதலில் படிப்பை கவனி” என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டுள்ளனர். எனினும் தன் ”உரையாடல் மூலமே மாற்றம் நிகழும்” என்று உறுதியாக இருக்கிறார் தன். தொடர் எதிர்ப்பு காரணமாக தற்காலிக நிவாரணமாக தட்சிணா மூர்த்தியின் மரணத் தண்டனை நிறுத்தி தற்போது வைக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருட்கள் கடத்தலுக்கு மரண தண்டனை அவசியம் என்று சிங்கப்பூர் தொடர்ந்து கூறி வருகிறது. அதுவே, ஆசியாவில் குற்றமற்ற தேசமாக சிங்கப்பூரை தொடர்ந்து வைக்கும் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது. மேலும், சிங்கப்பூரில் பலரும் மரண தண்டனைகளை ஆதரிப்பதாகவும் அரசு கூறுகிறது.
கரோனா காலத்தில் மட்டும் சிங்கப்பூரில் 10 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆசிய கண்டத்திலேயே அதிக அளவில் மரணத் தண்டனைகள் இங்குதான் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சீனாவில் ஆண்டுக்கு 1,000 பேர் வரை தூக்கிலிடப்படுவதாக சில தரவுகள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் கடத்தலுக்காக இந்தோனேசியா மரண தண்டனையை தொடர்ந்து பயன்படுத்துகிறது. ஆனால், 2016 முதல் மரண தண்டனையை இந்தோனேசியா நிறைவேற்றப்படவில்லை. மலேசியாவிலும் மரண தண்டனைகள் உண்டு. எனினும், தற்போது அங்கும் மரண தண்டனை விவாதமாக மாறி வருகிறது.
மரண தண்டனை குறித்து சிங்கப்பூர் குற்றவியல் வழக்கறிஞர்சுனில் சுதிஷன் கூறும்போது, “குற்றத்தில் ஈடுபடுவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கும் வகையில்தான் நமது சட்ட அமைப்பு உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக குற்றவாளிகளுக்கு பின்னால் உள்ள போதைப்பொருள் பிரபுக்கள் பிற நாடுகளில் தங்கள் வணிகத்தைச் செய்கிறார்கள். அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை” என்கிறார்.
மரண தண்டனைகளுக்கு எதிரான எங்களது நிலைப்பாடும் தொடரும் என்றும், வருங்காலத்தில் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் போராட்டக் குரல் எழுப்பிவரும் சிங்கப்பூரின் இளைய தலைமுறையினர் தெரிவித்துள்ளனர்.
உறுதுணை: பிபிசி