புதுடெல்லி: உக்ரைன் போர் காரணமாக, சலுகை விலையில் கச்சா எண்ணெய் தருவதால் ரஷ்யாவிடம் இருந்து பேரல் பேரலாக கச்சா எண்ணெயை இந்தியாவும், சீனாவும் இறக்குமதி செய்து குவிக்கின்றன. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடை விதித்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து அனைத்து வகையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட அனைத்து இறக்குமதிகளையும் நிறுத்த ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.இதனால், ஐரோப்பிய சந்தைக்கு மாற்றாக ஆசிய சந்தை மீது ரஷ்யா தனது கவனத்தை திருப்பி உள்ளது. குறிப்பாக, இந்தியா, சீனாவுக்கு ரஷ்யா சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்க முன்வந்தது. காரணம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, இந்த நாடுகள் மட்டுமே தற்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன.உக்ரைன் போர் மூண்ட கடந்த பிப்ரவரி 24ம் தேதிக்கு முன்பு வரை ரஷ்யாவிடம் இருந்து குறைந்த அளவு கச்சா எண்ணெய்யை மட்டுமே இந்தியா வாங்கி வந்தது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 5 சதவீதம் மட்டுமே ரஷ்யாவிடம் வாங்கப்பட்டது. அதாவது, கடந்த 2021ல் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.6 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் மட்டுமே ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. உக்ரைன் போருக்குப் பிறகு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையை விட 30 டாலர் விலை குறைத்து தர ரஷ்யா முன்வந்தது.இதன் காரணமாக தற்போது இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடமிருந்து போட்டி போட்டுக் கொண்டு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த பிப்ரவரியில் 2.7 கோடி பீப்பாயாக இருந்த இந்தியாவின் இறக்குமதி, மே மாதம் கிட்டத்தட்ட 8 கோடி பீப்பாயை தொட்டுள்ளது. இதில் சுமார் 7 கோடி பீப்பாய் கடல் வழியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்கு முன் இவ்வளவு அதிகமாக இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதில்லை. மேலும் முதல் முறையாக ஐரோப்பிய சந்தையை விட ஆசிய சந்தைக்கு அதிக அளவு கச்சா எண்ணெயை ரஷ்யா விற்றுள்ளது. பால்டிக், கருங்கடல் வழியாக இந்த கச்சா எண்ணெய் கப்பலில் இந்தியா, சீனாவுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 26ம் தேதி வரை கடல் மார்க்கமாக 5.7 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யும், பைப் லைன் வழியாக 73 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.