புதுடில்லி : டில்லியில், திருமணத்திற்குப் பின், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் ஆகியவற்றுடன் ஓடிப் போன மனைவியை கண்டுபிடித்து தரும்படி கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.டில்லி, ஆதர்ஷ் நகரைச் சேர்ந்தவர் அஜய் குமார். இவருக்கு சமூக வலைதளம் வழியாக ஒரு பெண் பழக்கமாகியுள்ளார்.
கணவரை பிரிந்து மூன்று குழந்தைகளுடன் வாழ்வதாக அந்த பெண் கூறியுள்ளார். ‘அதனால் பரவாயில்லை, உன் குழந்தைகள் இனி நம் குழந்தைகள்’ எனக் கூறி, அஜய் குமார் அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். மனைவிக்காக சிறிய ஜவுளிக் கடையை அஜய் குமார் திறந்துள்ளார். ஓராண்டு கடந்த நிலையில், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அஜய் குமார், ‘மாஜி’ கணவரை தேடிச் சென்று விசாரித்துள்ளார். அவர் அஜய் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்க போன போது, மனைவி அஜய் குமாரை தடுத்துஉள்ளார்.மறுநாள் மனைவியை காணாமல் திடுக்கிட்ட அஜய் குமாருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் ஆகியவற்றை மனைவி சுருட்டிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மனைவியின் பின்னணியை ஆராய்ந்தபோது, அவர் முதல் கணவரிடம் விவாகரத்து பெறவில்லை என்பதும், இதே போல பலரை ஏமாற்றி மணந்து, சில நாட்களில் பணத்துடன் ஓட்டம் பிடித்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, மனைவியை கண்டுபிடித்து தரும்படி அஜய் குமார் போலீசில் புகார் அளித்துஉள்ளார்.
Advertisement