புதுடெல்லி: யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை விமர்சித்த இஸ்லாமிய நாடுகள் அமைப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்த வழக்கில் ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த 19ம் தேதி தீர்ப்பளித்தது. இவருக்கு தண்டனை அளிக்கப்பட்டதை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்( ஓஐசி) மனித உரிமைகள் ஆணையம் விமர்சித்து இருந்தது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில், ‘‘ தீவிரவாதத்தை ஓஐசி நியாயப்படுத்த வேண்டாம். யாசின் மாலிக் வழக்கின் தீர்ப்பு குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் மனித உரிமைகள் ஆணையம் இந்தியாவை விமர்சித்து வெளியிட்ட கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இவ்வாறு செய்வதன் மூலம், யாசின் மாலிக்கின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கப்பட்டு உள்ளது,’’ என்றார்.