தன்னை புறக்கணிப்பதாக இருந்தால் தாராளமாக புறக்கணித்துக்கொள்ளுங்கள் ஆனால் தர்மம் மற்றும் நெறிமுறைகளை பேணுகிறோமா என்பதை நீங்களே உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களிடம் பேரம் பேசுவது போல் நடந்துகொண்டதாகவும், பத்திரிக்கையாளர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இதனால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அண்ணாமலையின் இந்த நடத்தைக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்கும்வரை, அவரின் பத்திரிகையாளர் சந்திப்பை செய்தி நிறுவனங்கள் புறக்கணிக்க வேண்டும்.” என்று தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளை டேக் செய்து பதிவை வெளியிட்டுள்ளது.
பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய @annamalai_k மன்னிப்பு கேட்கும்வரை, அவரின் பத்திரிகையாளர் சந்திப்பை @PTTVOnlineNews @sunnewstamil @news7tamil @News18TamilNadu @ThanthiTV @NewsTamilTV24x7 @polimer88 @MalaimurasuTv @sathiyamnews மற்றும் செய்தி நிறுவனங்கள் புறக்கணிக்க வேண்டும்.
— CMPC (@CMPChange) May 27, 2022
இது தொடர்பாக அந்த அமைப்பு தனது பேஸ்புக் பக்கத்தில், வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில்.
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலையை வன்மையாக கண்டிக்கிறோம். பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட பாஜக நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று (27.05.22) அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பில், நேற்று முன்தினம் (26.05.22) பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த சமயம் அவரை வரவேற்பதற்கு பாஜக சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, காவல்துறையின் அனுமதியுடன்தான் பேனர் வைக்கப்பட்டதாகவும், விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா? என்று செய்தியாளரிடம் கேட்டார். இதற்கு அந்த செய்தியாளர், தன்னிடம் உள்ள ஆதாரம் குறித்து விளக்க ஆரம்பித்த போது, அதை காது கொடுத்து கேட்காமல், அவரை பேச விடாமல் தடுத்த அண்ணாமலை, உங்களுக்கு “200 ரூபாய் நிச்சயம்” என்று செய்தியாளரை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.
அண்ணாமலையின், இந்த அநாகரிகமான வார்த்தையை அங்கிருந்த மற்ற செய்தியாளர்கள் கண்டித்த போது, “சரி 500 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது 1000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று எந்த வித அடிப்படை நாகரிகமும் இல்லாமல் அண்ணாமலை பேசியுள்ளார். கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை வாயடைக்கச் செய்யும் வகையில், அவர்களை இழிவுபடுத்துவது ஒரு கீழ்த்தரமான நடவடிக்கையாகும். கடந்த காலங்களிலும் அண்ணாமலை இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
திரு. அண்ணாமலை (@annamalai_k ) அவர்களுக்கு வணக்கம், https://t.co/N3HM9o6eN6 pic.twitter.com/NnMg4V3flq
— CMPC (@CMPChange) May 28, 2022
அதன் தொடர்ச்சியாக அண்ணாமலை செய்தியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதேபோல், நேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது, அதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம் பாஜக நிர்வாகி ஒருவர் கீழ்த்தரமாக நடந்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய பாஜக தலைவர் அண்ணாமலையை மற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.
பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட பாஜக நிர்வாகியின் மீது பாஜக தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பத்திரிகையாளர்களை மிரட்டுவது, அவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை பாஜகவினர் இத்துடன் நிறுத்திக்கொள்வதுடன் பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் வலியுறுத்துகிறது.” என்று பதிவிடப்பட்டுள்ளது.
இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பக்கத்தில், “பத்திரிகை மீது எங்களுக்கு உண்மையான மரியாதையும் அன்பும் இருக்கிறது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன; மரியாதை என்பதை கொடுத்து பெற வேண்டும். நீங்கள் என்னைப் புறக்கணிக்க விரும்பினால், அதை தாராளமாக செய்யுங்கள். தர்மம் மற்றும் நெறிமுறைகளைப் பேணுகிறோமோ என உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Dear CMPC
We have genuine respect & love for press. A coin has two sides & respect has to be given & taken
If you want to boycott me, you are free to do it🙏
Before that,request you to do some soul searching & ask yourself are you maintaining your dharma & ethics in reporting? https://t.co/FOkZESFDcq
— K.Annamalai (@annamalai_k) May 28, 2022
இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பான செய்தி இனி பத்திரிக்கைகளில் வெளியிடப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.