புதுடில்லி : சீன நாட்டினருக்கு விசா வாங்கித் தர, 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், காங்., – எம்.பி., கார்த்தியிடம் மூன்றாவது நாளாக நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.தமிழகத்தைச் சேர்ந்த காங்., மூத்த தலைவர் சிதம்பரம், 2011ல் மத்தியில் இருந்த காங்., ஆட்சியில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, சீன நாட்டைச் சேர்ந்த 263 பேருக்கு, சிதம்பரத்தின் மகனும், லோக்சபா எம்.பி.,யுமான கார்த்தி, தன் தந்தையின் உதவியுடன் விசா பெற்றுத் தந்ததாகவும், இதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் சி.பி.ஐ., தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி மற்றும் அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன் மீது, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து, பாஸ்கர ராமனை கைது செய்தது. இது சம்பந்தமாக டில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கார்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மூன்றாவது நாளாக நேற்றும் விசாரணைக்காக கார்த்தி ஆஜரானார். சி.பி.ஐ., அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளால் கார்த்தியை மடக்கினர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க கார்த்தி நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கியுள்ளார்.
Advertisement