திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் 13 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 30 ஆயிரம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் ஆகஸ்ட் மாதம் வரை விற்பனை செய்து உள்ளது. தினமும் இலவச தரிசனத்தில் எவ்வித டிக்கெட்டுகளும் இல்லாமல் அனுமதிக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. தற்போது தினமும் 75 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை நேற்று முன்தினம் ஒரேநாளில் ஏழுமலையான் கோயிலில் 73 ஆயிரத்து 358 பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.4 கோடியே 11 லட்சம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். 41 ஆயிரத்து 900 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடியை காணிக்கை செலுத்தினர். சனிக்கிழமையான நேற்று நிலவரப்படி திருமலையில் உள்ள வைகுண்டம் காம்ப்பளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. இதனால், அறைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகளில் 3 கி.மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் 13 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர்.