Venkaiah Naidu tweet about Sarvarkar creates controversy before unveiling DMK leader Karunanidhi statue: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று தமிழகம் வந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைக்க நிலையில், சாவர்க்கர் குறித்து காலையில் ட்வீட் செய்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, தமிழக அரசு சார்பில் சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ரூ. 1.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. 16 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சிலைக்கு 12 அடியில் பீடம் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், சிலையை சுற்றி மெழுகுப்பூச்சுடன் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை 5:30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த சிலை திறப்பு விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்க உள்ளார். பின்னர், கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
இந்தநிலையில், திராவிடக் கட்சித் தலைவரான கருணாநிதியின் சிலையை பாஜக தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவை வைத்து திறப்பது தொடர்பாக திமுக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
திருவாரூரில் கருணாநிதியின் பெயரை, தேரோடும் ஒரு தெருவுக்கு வைக்க எதிர்ப்பு தெரிவித்து, பெரிய போராட்டத்தை நடத்தி அந்த முயற்சியையே பாஜக பின்வாங்க வைத்தது. அப்படிப்பட்ட கட்சியின் முன்னாள் தலைவரை ஏன் கருணாநிதி சிலை திறப்புக்கு அழைக்க வேண்டும் என திமுக தொண்டர்கள் ஆதங்கப்பட்டனர். மேலும், அரசியல் களத்தில் திமுகவும் பாஜகவும் எதிரெதிர் நிலைப்பாட்டில் உள்ள நிலையில், கருணாநிதியின் சிலை திறப்புக்கு திமுக, வெங்கையா நாயுடுவை அழைத்திருப்பது பல்வேறு யூகங்களையும் கிளப்பியுள்ளது. நீட் தேர்வு விலக்கு போன்ற விஷயங்களில் மத்திய பாஜக அரசின் ஆதரவு தேவை என்பதால், கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வெங்கையா நாயுடுவை திமுக அழைத்துள்ளதா என்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனிடையே, இன்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கும் வெங்கையா நாயுடு காலையில் செய்த ட்வீட் தி.மு.க மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவரான சாவர்க்கரின் பிறந்தநாளான இன்று அவரைப் புகழ்ந்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு செய்த ட்வீட் தான் திமுக தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: 35 ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதிக்கு மீண்டும் சிலை… மகிழ்ச்சியில் மு.க ஸ்டாலின்
வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், “விநாயக் தாமோதர் சாவர்க்கரின் தளராத மனப்பான்மையும், நமது தாய்நாட்டின் மீதான நிலையான அன்பும் ஒவ்வொரு இந்தியருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. வீரமிக்க சுதந்திரப் போராட்ட வீரரும், பக்தியுள்ள தேசியவாதியுமான வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகள். அவர் ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி, தொலைநோக்கு சிந்தனையாளர் மற்றும் திறமையான எழுத்தாளர்” என ட்வீட் செய்துள்ளார்.
இந்த ட்வீட் திமுகவினருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் கொண்டாடும் தலைவரான சாவர்க்கரை வாழ்த்தி ட்வீட் செய்துவிட்டு, அவரை கடுமையாக விமர்சிக்கும் திமுகவின் தலைவர் கருணாநிதி சிலையை திறந்து வைக்க வருகிறார் வெங்கையா நாயுடு என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனை ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.