சென்னை: “நமது குப்பை: நமது பொறுப்பு” என்ற பெயரில் குப்பைகளைத் தரம் பிரிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன் படி நாள்தோறும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பொதுமக்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து வழங்க வேண்டும்.
அவ்வாறு பிரித்து வழங்காத தனி நபர் இல்லங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன் படி அபராதம் விதிக்கப்படும் சென்னை மாநகராட்சியால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் மலேரியா பணியாளர்களை கொண்டு நாள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மாதவரம், கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மூன்று மண்டலங்களில் மாநகராட்சி மலேரியா பணியாளர்களை கொண்டு பொதுமக்களுக்கு இது தொடர்பான விபரங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்ப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.