திராவிட இயக்கத் தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவருமான மறைந்த மு.கருணாநிதியின் திருவுருவச் சிலையை அவரது மகனும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு ஆகியோர் இன்று திறந்துவைத்தனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 16 அடி உயர இந்த சிலை, 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முன்னாள் முதல்வரின் மற்றொரு சிலை சேதப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
16 அடி உயர இந்த சிலை வெண்கலத்தால் நிறுவப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழாவுக்குப் பிறகு, துணைக் குடியரசுத் தலைவர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள், சிலை அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, கலாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சிலை திறப்பு விழாவிற்கு, மக்கள் கூட்டம் கூட்டமாக ஆரவாரத்துடன் வருகைதந்தனர். சிலை திறப்பிற்கு பிறகு, அனைவரும் சிலையின்முன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அலைமோதினர். இதனால் போக்குவரத்து பாதிப்பிற்கு உள்ளாயிற்று.
தி.மு.க.வின் முன்னாள் தலைவரான மு.க. கருணாநிதியின் சிலை திறப்பிற்கு தொண்டர்கள் கூறியதாவது:
“தமிழ்நாட்டிற்கு பல நலத்திட்டங்களை கொண்டுவந்த முதல்வரின் சிலைக்காக காத்திருந்தோம். இன்று இச்சிலையை பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இவரைப்போல மக்களுக்கு பல நலத்திட்டங்களை, மக்களின் வாழ்க்கை முன்னேற பாடுபட்ட பெரும் தலைவர்களின் உருவச்சிலை நிறுவப்படுவதை பார்ப்பதற்கு பெருமையாக இருக்கிறது”