`பாலியல் தொழிலும் ஒரு தொழில்தான்!' – உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள் அமலுக்கு வருமா?!

மே 26 அன்று, பாலியல் தொழில் தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சில முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்திருப்பது நாடு முழுவதும் கவனம்பெற்றிருக்கிறது. `கொரோனா காலத்தில், பாலியல் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்கள், நிதியுதவிகள் வழங்கப்பட வேண்டும்’ என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போதுதான் சில முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்ற உத்தரவு

இந்த வழக்கில் தொண்டு நிறுவனம் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், “இந்தியா முழுவதும் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்களை காவல்துறை மிக மோசமாக நடத்துகிறது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை, அவர்களது விருப்பத்துக்கு மாறாகக் காப்பகங்களில் அடைக்கின்றனர். இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்” என்றார்.

மத்திய அரசின் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயந்த், “பெண்கள் பலரும் கடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே காப்பகங்களில் சேர்க்கப்படுகிறார்கள்” என்று வாதிட்டார். இரண்டு தரப்பு வாதாங்களையும் கேட்ட நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகிய மூவர் அடங்கிய அமர்வு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. “18 வயதைக் கடந்தவர்கள், விருப்பத்துடன் பாலியல் தொழில் செய்வது சட்டப்பூர்வமானதுதான். எனினும், பாலியல் கூடங்கள் நடத்துவது சட்டவிரோதமானது. பெரும்பாலான சமயங்களில், பாலியல் தொழிலாளர்களை காவல்துறை மோசமாகவே நடத்துகிறது. இந்த அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவேண்டும். அவர்களை உடல்ரீதியாகவோ, மனரீதியாக காவல்துறையினர் துன்புறுத்தக்கூடாது.

ரெய்டு நடத்தும்போது பாலியல் தொழிலில் விருப்பப்பட்டு ஈடுபடுபவர்களைக் கைது செய்யக்கூடாது. அவர்களுக்கு அபராதமும் விதிக்கக்கூடாது. பாலியல் தொழிலாளர்கள் புகார் அளித்தால், காவல்துறை அதில் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும். பாலியல் தொழிலாளர்களின் அடையாளங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரிக்கக்கூடாது. காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாலியல் தொழிலாளர்கள் குறித்து மாநில அரசுகள் ஆய்வு நடத்த வேண்டும். அங்கு அவர்கள் விருப்பத்துக்கு மாறாகத் தங்க வைக்கப்பட்டிருந்தால், உடனடியாக அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அவர்களுக்குத் தேவையான சட்ட, மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த உத்தரவுகள் வெளியான பின்னர் பேசிய மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் அனைத்தும் பாலியல் தொழிலாளிகள் சமூகத்துக்கு நல்ல செய்தியாக அமைந்திருக்கிறது. இனி அவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படக்கூடாது. ஆதார், ரேஷன் அட்டைகளைப் பெறுவது இனி அவர்களின் உரிமை என்றும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.

பாலியல் தொழில்

உச்ச நீதிமன்ற உத்தரவுகள் குறித்துப் பேசும் சமூக ஆர்வலர்கள் சிலர், “ `விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டப்பூர்வமானது’ என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கக்கூடியது. இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு வழியின்றிதான் இந்தத் தொழிலைச் செய்கிறார்கள். அவ்வாறு நிர்பந்தத்தின் பெயரில் பலரும் இந்தத் தொழிலுக்குத் தள்ளப்படும் நிலையை அரசுதான் தடுத்து நிறுத்த வேண்டும். இனியாவது இந்த உத்தரவின்படி பாலியல் தொழிலாளர்களிடம், காவல்துறை கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்களை மூன்றாம் தரக் குடிமக்களைப் போலவோ, குற்றவாளிகளைப் போலவோ நடத்தக்கூடாது. காவல்துறையினருக்கு இது குறித்த விழிப்பு உணர்வுகளை மாநில அரசுகள்தான் ஏற்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை காவல்துறை பின்பற்றுவதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.