1.90 லட்சம் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்

சென்னை: மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையாக ரூ.5,000 வழங்கும் பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

கடல் மீன் வளத்தைப் பேணிக்காக்கும் வகையில் தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மீன்பிடித் தடைக்காலத்தின்போது விசைப் படகுகள், இழுவலைப் படகுகளில் மீன்பிடிக்கச் செல்வோர் மற்றும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், ஒவ்வொரு குடும்பத் துக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலத்தில், தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1.90 லட்சம் கடல் மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.95 கோடி வழங்கப்படுகிறது.

மீன்வளம், மீனவர் நலத் துறை மற்றும் கால்நடைகள் பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருவள்ளுர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் வங்கிக் கணக்குக்கு, நிவாரணத் தொகையை நேரடியாக அனுப்பும்ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளத் துறை ஆணையர் பழனிசாமி, திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.