ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்- சுற்றுலா பயணிகள் அச்சம்

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. 4 பக்கமும் கடல் சூழ்ந்த ராமேசுவரத்தில் ராமர் சிவபூஜை செய்ததாக ஐதீகம். இதனால் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

காசி செல்லும் பக்தர்கள் ராமேசுவரத்திலும் புனித நீராட வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே காசி செல்லும் பக்தர்கள் ராமேசுவரத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று (ஞாயிற்று) விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் பகுதியில் புனித நீராடினர். அப்போது திடீரென 100 மீட்டர் தூரம் கடல் உள்வாங்கி சென்றது. இதனை கண்ட பக்தர்கள் அச்சம் அடைந்தனர். இயற்கை சீற்றம் ஏதோ ஏற்பட போகிறதோ? என்று பதட்டம் அடைந்தனர். ஆனால் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. கடல் அமைதியாக காணப்பட்டது.

இதனால் ஒரு சில பக்தர்கள் அச்சம் அடைந்த போதிலும் பல பக்தர்கள் அதை பற்றி கவலைபடாமல் புனித நீராடினர்.

முன்னதாக ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோவிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வடக்கு வாசல் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட அதிக நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதனை தொடர்ந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதணை வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம். ஆனால் சமீப காலமாக அடிக்கடி கடல் உள்வாங்கி வருகிறது. கடந்த 10 நாட்களாக திடீர், திடீரென கடல் உள்வாங்கியபடி இருப்பதால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டு விடுமோ? என்று ராமேசுவரம் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.