வந்தே பாரத் ரயில் என்பது உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில்
வந்தே பாரத் ரயில்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் ரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளை கொண்டதாகவும், 14 சேர்கார் பெட்டிகளையும், 2 சொகுசு இருக்கைகள் கொண்ட பெட்டியாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது.
தற்போது டெல்லி முதல் வாரணாசி வரை மற்றும் டெல்லி முதல் கத்ரா வரை என 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் 4-5 வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டு இயக்கப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர்
அஷ்வினி வைஷ்னவ்
தெரிவித்துள்ளார். ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் 67ஆவது
தேசிய ரயில்வே விருது
வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் விருதுகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், உலக தரத்திற்கு இணையாக ரயில்வேயை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வருகிற செப்டம்பர் மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் 4-5 வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டு இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அதிவேக புல்லட் ரயில்களுக்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.