டெல்லி தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பணம் பறித்தது தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து பரிசுப்பொருள்களை வாங்கியதாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பல முறை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து பரிசுப்பொருள்கள் பெற்றதை ஜாக்குலின் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ஜாக்குலின் வெளிநாடு செல்ல அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஒரு முறை மும்பை விமான நிலையம் வரை வந்தபிறகு திரும்ப அனுப்பப்பட்டார். சமீபத்தில் வெளிநாடு செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கோரி ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். பின்னர் அந்த மனுவை ஜாக்குலின் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வெளிநாடு செல்ல அனுமதிக்கவேண்டும் எனக்கோரி ஜாக்குலின் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் அபுதாபியில் நடக்கும் திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
இதற்கு ரூ.50 லட்சத்துக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்றும், எங்குச் செல்லப்போகிறார்… எங்குத் தங்கப்போகிறார், தொடர்பு எண், எப்போது இந்தியா திரும்புவார் என அனைத்து விவரங்களையும் கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
ஜாக்குலின் மே 31-ம் தேதியிலிருந்து ஜூன் 5-ம் தேதிவரை அபுதாபி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார். ஜூன் 2-4-ம் தேதிகளில் பாலிவுட் திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜாக்குலின் கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் தங்கி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சுகேஷ் சந்திரசேகருடன் ஏற்பட்ட தொடர்பால் கடுமையான நெருக்கடிக்கு ஆளான ஜாக்குலின் இப்போது தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.