பெண்களுக்கு நைட் ஷிப்ட் வேலை கிடையாது: அரசு அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழலை வழங்கும் பொருட்டு, அவர்களை கட்டாயப்படுத்தி நைட் ஷிப்ட் வேலையில் ஈடுபடுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட புதிய வழிகாட்டுதல்களை உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ளது. இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்துக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்களின்படி, இரவு 7 மணியில் இருந்து காலை 6 மணி வரை பெண் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாது. ஒருவேளை அவசியம் கருதி பணியில் ஈடுபடுத்தப்படும் சூழலில், அவர்களது எழுத்துப்பூர்வ அனுமதி கட்டாயம் தேவை. அவர்கள் வீட்டில் இருந்தோ அல்லது அலுவலகங்களில் இருந்தோ பணியாற்றிக் கொள்ளலாம். அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதிய கண்காணிப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஒவ்வொரு அலுவலகமும் இந்த விதியைப் பின்பற்ற வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரவு 7 மணிக்குப் பிறகு ஒரு பெண் வேலை செய்ய மறுத்தால், அவரை பணிநீக்கம் செய்ய முடியாது. அதை மீறினால் நிறுவனத்திற்கு அதிக அபராதமோ அல்லது சிறை தண்டனையோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இரவு ஷிப்டுகளில் பணிபுரியும் பெண்களுக்கு நிறுவனங்கள் உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும். பெண்களுக்கு கழிவறை வசதி, உடை மாற்றும் அறைகள் இருக்க வேண்டும். ஒரு பெண்ணை அலுவலகத்தில் இருந்து மட்டுமே இரவு ஷிப்டில் வேலை செய்யுமாறு கேட்க வேண்டுமானால், அந்த அலுவலகத்தில் அவர் தவிர வேறு 4 பெண்களும் பணியில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய ஒவ்வொரு நிறுவனமும் ஒரு குழுவை வைத்திருக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.