அரசு விரைவு பஸ்களில் குப்பை கிடந்தால் வாட்ஸ்அப்பில் புகார் செய்யலாம்

சென்னை:

அரசு விரைவு போக்கு வரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 1000 பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன.

நீண்டதூரம் செல்லக்கூடிய பயணிகள் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள். 400-க்கும் மேல் குளிர்சாதன வசதி பஸ்கள் இயக்கப்படுகிறது.

பொதுவாக அரசு விரைவு பஸ்கள் கடந்த காலங்களில் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டதால் மக்கள் பயணம் செய்ய முன்வருவது இல்லை. தற்போது தனியார் பஸ்களுக்கு இணையாக சொகுசு பஸ்கள் இயக்கப்படுவதால் மக்கள் விரும்பி பயணம் செய்கிறார்கள். அதிலும் கோடை காலம் என்பதால் ஏ.சி.பஸ்கள் உடனடியாக நிரம்பி விடுகின்றன.

இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் செயலாளர் கோபால் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் பயணிகள் மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக பயணம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் பயணிகளை கவரும் வகையில் பஸ்சை தூய்மையாக வைத்திருக்கவும், இருக்கைகள், கண்ணாடி பஸ்சின் உட்பகுதி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து வெளியில் சென்று வந்த பஸ்களை உடனுக்குடன் கழுவி சுத்தம் செய்யவும், பஸ்சுக்குள் கிடக்கும் குப்பைகளை அகற்றவும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தூய்மை படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் போது ஏதாவது குறை இருந்தால் புகாராக தெரிவிக்கவும் வாட்ஸ்அப்எண் அனைத்து விரைவு பஸ்களிலும் உட்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

இருக்கைகள், சுத்தம் இல்லாமலோ, குப்பைகள் இருந்தாலோ அதுபற்றி தகவல் கொடுக்கலாம். அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கூடுதலாக கட்டணம் வசூலிப்பு, டிரைவர், கண்டக்டரின் அணுகு முறையில் பாதிக்கப்பட்டாலும் பொதுமக்கள் புகார் கூறலாம். 9445014448 மற்றும் [email protected], [email protected] மின்னஞ்சல் மூலமாகவும் ஆலோசனை கூறலாம்.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:-

அரசு விரைவு பஸ்களில் பயணிகள் முகம் சுழிக்காமல் மகிழ்ச்சியாக பயணம் செய்ய தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு கிளையிலும் பஸ்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. ஏ.சி. பஸ்களில் குளிர்சாதன கருவிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இருக்கைகள், அதன் மீதுள்ள உறைகள் சுத்தம் செய்து பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதாவது குறை இருந்தால் பயணிகள் வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஆலோசனை கூறினால் அதனை ஏற்று சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதால் பயணிகள் அதிகரித்து வருகின்றனர். பயணிகள் கூறும் குறைகள் ஆன்லைன் வழியாக உடனடியாக சரி செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.