ஆலப்புழா: கேரளாவின் ஆலப்புழாவில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) சார்பில் கடந்த 21-ம் தேதி ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சிறுவன் ஒருவன் தனது தந்தையின் தோளில் அமர்ந்தபடி பிற மதங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினான். இது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி கண்டனத்துக்கு ஆளானது. இது தொடர்பாக பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் மதவெறுப்பு கோஷமிட்ட சிறுவனின் குடும்பம் கொச்சி அருகே பல்லுருதி என்ற இடத்தில் குடியிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். தலைமறைவாக இருந்த அந்த குடும்பம் நேற்று தங்கள் வீடு திரும்பிய போது சிறுவனின் தந்தையை போலீஸார் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். மதவெறுப்பு கோஷமிட்ட சிறுவனை, போலீஸார் கண்டுபிடித்தாலும், சிறார் நீதி சட்டப்படி அவனை போலீசாரால் கைது செய்ய முடியாது. அவனது குற்ற செயல்பாடு குறித்து குழந்தை நல குழுவிடம் போலீஸார் அறிக்கை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலப்புழா நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று தாக்கல் செய்த ரிமாண்ட் அறிக்கையில் கூறியதாவது: பிஎப்ஐ பேரணிக்கு சிறுவனை அவரது தந்தை, அழைத்துச் சென்றுள்ளார். அவர் பிஎப்ஐ உறுப்பினர் என கூறப்படுகிறது. மதவெறுப்பு கோஷம் எழுப்ப சிறுவனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் மத உணர்வுகளை தூண்டவும், இதர மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தவும் சிறுவனின் தந்தை முயன்றுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.