நேபாள நாட்டின், பொக்காராவிலிருந்து ஜோம்சோம் நோக்கி இன்று காலை 9.55 மணியளவில் புறப்பட்ட விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 இந்தியர்கள் உட்பட மொத்தம் 22 பேருடன் பயணித்த தாரா ஏர் நிறுவனத்தின், 9N-AET என்ற சிறிய ரக விமானம், வானில் பறக்கத்தொடங்கிய 15 நிமிடங்களில், கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் தொடர்பை இழந்துவிட்டதாக விமான செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த விமானத்தில் பயணித்த 4 இந்தியர்களும் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், விமானத்தில் இவர்களுடன் ஜெர்மனியைச் சேர்ந்த 2 பயணிகளும், 13 நேபாள பயணிகளும் உடனிருந்தனர் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், “காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் நேபாள அரசானது, 2 ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழியாகவும், ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தரைவழி வழியாக தேடுதல் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. ஆனால், மோசமான வானிலை தேடுதல் நடவடிக்கைக்கு இடையூறாக உள்ளது” என உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபனிந்திர மணி போகரேல்தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகமானது, “தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகளின் குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்பில் உள்ளது” என அவசர தொலைபேசி எண்: 977-9851107021-ஐ குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளது.