சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும்படி தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், CITIIS திட்டத்தின் கீழ் சென்னைப் பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் மற்றும் கொரட்டூர் தாங்கல் ஏரி புனரமைப்பு பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.280 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, சி.பி. ராமசாமி சாலையில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி மற்றும் கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-135க்குட்பட்ட அசோக் நகர் 18வது அவென்யூவில் ரூ.6.8 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார்.

தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123க்குட்பட்ட சி.பி. ராமசாமி சாலையில் ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தப் பணிகளை விரைந்து முடித்து ஒரு மாதக் காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

CITIIS திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோடம்பாக்கம் மண்டலம், நெசப்பாக்கம் சென்னை பள்ளியில் ரூ.3.23 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட கொரட்டூர் தாங்கல் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 16.5 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரியானது ரூ.1.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு நீர் தேக்கத்தை கொண்டுள்ளது. இந்த ஏரியில் ரூ.8.91 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த ஏரியைச் சுற்றிலும் பசுமைப் பரப்பளவினை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணி, சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் அனைத்தும் முடிவுற்று ஒரு மாதக் காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.