க.சண்முகவடிவேல், திருச்சி
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், இன்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்று நோய் காட்டுப்பாட்டுக்காக அமைக்கப்பட்டு வரும் புதிய உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளை பார்வையிட்டார்.
கொரோனா தொற்று நோய் காட்டுப்பாட்டுக்காக அமைக்கப்பட்டு வரும் புதிய உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் ( Emergency COVID response package — ECRP Ward) அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு படுக்கையும் தலா ரூபாய் 2.90 இலட்சம் மதிப்பில் என மொத்தம் 32 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வார்டில் அமைய உள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் ஆலோசனை வழங்கினார். இந்தப் பிரிவில் 32 படுக்கைகளில் 20 படுக்கைகள் பெரியவர்களுக்கும், 12 படுக்கைகள் சிறுவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
“பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி 1.22 கோடி பேர் இதுவரை போட்டுக்கொள்ளவில்லை.
குரங்கு அம்மை நோய்க்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கு அம்மை நோய்க்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் முந்தைய அளவில் இல்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100க்கும் கீழே தான் இருக்கிறது. அது, மேலும் பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பயோ மெட்ரிக் முறையை அடிப்படையாகக் கொண்ட வருகைப் பதிவு, படிப்படியாக அனைத்து மருத்துவ மனைகளுக்கும் செயல்படுத்த உள்ளோம். மருத்துவமனையில் மருத்துவர்கள் வராமலிருந்தால் நோயாளிகளே புகார் செய்யலாம். தவறு செய்யும் மருத்துவர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். செல்போனை வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்டர்நெட் அடிக்சன் மையம் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்களுக்கு ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கப்படும். பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு பரிசீலனை நடந்து வருகிறது” என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது, திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கே. வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அருண் ராஜ் மற்றும் மருத்துவத்துறை , சுகாதாரத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“