பெங்களூரு: முகலாயர் ஆட்சி காலத்தில் 36 ஆயிரம் கோயில்கள் மசூதிகளாக மாற்றப்பட்டன என கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா ஷிமோகாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மங்களுரு ஜும்மா மசூதியை புனரமைக்கும்போது இந்து கோயில் என தெரிய வந்திருக்கிறது. அதனை சட்ட ரீதியாக மீட்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளது பாராட்டத்தக்கது.
ஸ்ரீரங்கப்பட்டினம் ஜாமியா மசூதியும் 300 ஆண்டுகளுக்கு முன்னால் இந்து கோயிலாக இருந்தது. அதில் இப்போதும் இந்து கடவுளின் சிலைகள் இருக்கின்றன. எனவே மசூதியில் பூஜை நடத்த இந்துக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
முகலாயர் ஆட்சி காலத்தில் 36 ஆயிரம் இந்து கோயில்கள் அழிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை மசூதிகளாக மாற்றப்பட்டன. இதையெல்லாம் மீட்கும் காலம் வந்துவிட்டது. எந்தவித சண்டை சச்சரவுகளும் இல்லாமல் நீதிமன்ற ஆணையின் பேரிலேயே மீட்டெடுப்போம்.
இவ்வாறு ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
இவரது இந்தக் கருத்தால் கர்நாடகாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஈஸ்வரப்பாவின் பேச்சுக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.