எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை (மே 30) வருகை தரவுள்ள நிலையில், புது ஆறு என்றழைக்கப்படும் கல்லணை கால்வாயில் இரண்டாவது நாளாக தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்பு எந்த ஆண்டும் இல்லாத அளவில் முதல் முறையாக இந்த ஆண்டு கோடை காலத்தில் மே 24-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, மே 27-ம் தேதி கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், கல்லணை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக இந்த ஆண்டு மிகவும் குறைவாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து போதிய நீர் வரத்து இல்லாததால் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் தலா 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், புது ஆறு என அழைக்கப்படும் கல்லணைக் கால்வாயில் வெறும் 100 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அடுத்தடுத்த நாட்களில் போதுமான அளவு தண்ணீர் திறந்து விடப்படும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், மறுநாளே கல்லணைக் கால்வாய் மூடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக (மே 28 மற்றும் 29)) கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
கல்லணைக் கால்வாயில் பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணிகளும், பாலம் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருவதால், இரண்டாவது நாளாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், கல்லணைக் கால்வாயை நம்பி குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், காவிரியில் 2,820 கன அடியும், வெண்ணாற்றில் 816 கன அடியும், கொள்ளிடத்தில் 411 கன அடியும் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை நம்பி குறுவை சாகுபடியை தொடங்க முடியாது என்பதால் முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் எந்தவித பயனும் இல்லை என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
தற்போது கோடைக்காலம் என்பதால் மேட்டூர் அணையில் இருந்து குறைந்தபட்சம் 20,000 கனஅடி திறந்துவிடப்பட்டால்தான் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்கின்றனர் விவசாயிகள்.
டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளைக் கிணறுகளைக் கொண்டு ஏற்கெனவே விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் மட்டும் தற்போது பணிகளைத் தொடங்கி இருக்கின்றனர். ஆழ்துளைக் கிணறு பாசனம் மட்டும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், ஆற்றுப் பாசனத்தை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள் இன்னும் குறுவை சாகுபடி பணிகளைத் தொடங்காமல் காத்திருக்கின்றனர்.
எனவே, மேட்டூர் அணையில் இருந்து குறைந்தபட்சம் 20,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூர்வாரும் பணிகளும், பாலம் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருவதால் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“