ஜம்மு: ஜம்மு – காஷ்மீரில் வெடிகுண்டுகளுடன் எல்லை தாண்டி வந்த, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானத்தை, எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்த குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.இமயமலை தொடரில் அமைந்துள்ள புகழ் பெற்ற அமர்நாத் கோவிலுக்கான புனித யாத்திரை ஜூன் 30ல் துவங்குகிறது.
இக்கோவிலுக்கு, ஜம்மு – காஷ்மீரின் நியூவான், பஹல்காம், கந்தர்பால் ஆகிய ஊர்கள் வழியாகவும் பக்தர்கள் செல்வர்.இதையொட்டி இந்த பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. இந்நிலையில், நேற்று காலையில் நம் அண்டை நாடான பாகிஸ்தான் பகுதியில் இருந்து, ஒரு ட்ரோன் எல்லை தாண்டி வந்தது.
நம் வீரர்கள் அதை கண்காணித்து சுட்டு வீழ்த்தினர். அதில், ஏழு காந்த வெடிகுண்டுகள் மற்றும் கையெறி நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. அவை செயலிழக்கச் செய்யப்பட்டன.சமீபகாலமாக பாக்.,கில் இருந்து, ட்ரோன் வாயிலாக ஆயுதங்கள் மற்றும் போதை மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.நம் வீரர்களும் உடனுக்குடன் அவற்றை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர்.
Advertisement