2 கர்ப்பிணி உட்பட 3 சகோதரிகள் தற்கொலை| Dinamalar

வரதட்சணை கொடுமையால் விபரீத முடிவு

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் இரண்டு கர்ப்பிணியர் உட்பட மூன்று சகோதரிகள் தற்கொலை செய்துள்ளனர்; இரண்டு குழந்தைகளின் சடலங்களும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டன. கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர்களும், அவர்களது குடும்பத்தினரும் சித்ரவதை செய்ததால், குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து சகோதரிகள் தற்கொலை செய்துள்ளனர்.

சித்ரவதை
ராஜஸ்தான் மாநிலம் துது என்ற இடத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஐந்து சடலங்கள் மிதந்தன. தகவல் அறிந்து போலீசார் வந்து அவற்றை மீட்டனர். மீட்கப்பட்டவர்கள், அதே ஊரில் வசித்த காளி தேவி, 25, மம்தா மீனா, 23, கமலேஷ் மீனா, 20, காளி தேவியின் குழந்தைகளான ஹர்ஷித், 4 மற்றும் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதில் மம்தாவும், கமலேசும் கர்ப்பிணியர். இறந்த மூன்று பெண்களுமே உடன் பிறந்த சகோதரிகள். மூவரையும் ஒரே குடும்பத்தில், திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.

மூவரின் கணவர்களுமே விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். கணவன் குடும்பத்தினர் தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்து வந்துள்ளனர். சமீபத்தில் தந்தைக்கு மொபைல் போனில் பேசிய மூவரும், மாமியார் மற்றும் கணவர் குடும்பத்தினர் தினமும் சித்ரவதை செய்வதாக கூறி கதறி அழுதுள்ளனர்; தங்களை அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளனர்.இந்நிலையில், கடந்த 25ம் தேதி மார்க்கெட்டுக்கு சென்ற ஐந்து பேரையும் அதன் பின் காணவில்லை. இதைத் தொடர்ந்து, ஐந்து பேரும் சடலங்களாக மீட்கப்பட்டு உள்ளனர்.

‘வாட்ஸ் ஆப்’
இதற்கிடையே, மூத்த சகோதரி காளிதேவி தன் மொபைல் போனில், ‘வாட்ஸ் ஆப்’பில் அனுப்பியுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:நாங்கள் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம். எங்கள் சாவுக்கு கணவர்களின் குடும்பத்தினர் தான் காரணம். தினம் தினம் சித்ரவதையை அனுபவிப்பதை விட, ஒரேயடியாக இந்த உலகத்தை விட்டுச் செல்லலாம் என முடிவு எடுத்து விட்டோம். அடுத்த பிறவியிலும் நாங்கள் ஒரே குடும்பத்தில் பிறப்போம் எனநம்புகிறோம்.நாங்கள் சாக விரும்பவில்லை என்றாலும், கணவர் குடும்பத்தினர் தினமும் செய்யும் சித்ரவதையை எங்களால் தாங்க முடியவில்லை. எங்கள் சாவுக்கு பெற்றோரை குறை சொல்லாதீர்கள்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, மூன்று பெண்களின் கணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.