சண்டிகர் : பஞ்சாபி பாடகர் சித்து மோசிவாலாவுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நேற்று முன்தினம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், நேற்று அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். கொலையாளி களை போலீசார் தேடி வருகின்றனர். பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தை சேர்ந்தவர் சித்து மோசிவாலா ௨௮. பஞ்சாபி மொழி பாடகரான இவர், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மன்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்விஅடைந்தார்.
மாநிலத்தில் வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிக்கும் நோக்கில், மோசிவாலா உட்பட ௪௨௪ பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை, பஞ்சாப் அரசு நேற்று முன்தினம் வாபஸ் பெற்றது. இந்நிலையில் மன்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கி கிராமத்தில் உள்ள தன் வீட்டுக்கு இரண்டு நண்பர்களுடன் சித்து மோசிவாலா, ஜீப்பில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜீப்பை நோக்கி சிலர் சரமாரியாக சுட்டனர்.
இதில் குண்டுகள் பாய்ந்ததில் மோசிவாலா படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் விழுந்தார். சுட்டவர்கள் தப்பியோடி விட்டனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு மோசிவாலா கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். மோசிவாலா கொலைக்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Advertisement