இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னதாக, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியுடன் சமரச பேச்சுக்கு இம்ரான் முயற்சித்ததாக கூறப்படும், ‘ஆடியோ’ வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் பார்லிமென்டில் சமீபத்தில் நடந்த ஓட்டெடுப்பில், அந்நாட்டு பிரதமராக இருந்த இம்ரான் கான் தோல்வி அடைந்தார். னஇதையடுத்து, நவாஸின் பாக்., முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவி ஏற்றார். இந்த புதிய அரசை இறக்குமதி அரசு என விமர்சித்து வரும் இம்ரான் கான், விரைவில் பொது தேர்தல் நடத்த வலியுறுத்தி பேரணி நடத்தினார்.நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மனதில் வைத்து பேரணியை கைவிடுவதாக திடீரென இம்ரான் அறிவித்தார். இதையடுத்து, பாக்., ராணுவத்துடன் இம்ரானுக்கு ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில், பாக்., மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரியுடன், அந்நாட்டின் ரியல் எஸ்டேட் அதிபர் மாலிக் ரியாஸ் ஹுசைன் பேசுவதாக நம்பப்படும் ஆடியோ சமீபத்தில் வெளியானது. னமொத்தம் 32 வினாடிகள் ஓடக்கூடிய அந்த ஆடியோவில், ‘இம்ரான் கான் எனக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பி வருகிறார். இன்று கூட ஏராளமான குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார்’ என தொழிலதிபர் ரியாஸ் கூறுகிறார்.
அதற்கு பதில் அளிக்கும் முன்னாள் அதிபர் சர்தாரி, ‘இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை’ என்கிறார். உடனே, ‘பரவாயில்லை; இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்பினேன்’ என ரியாஸ் கூறுகிறார். இம்ரான் மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்னதாக இந்த உரையாடல் நடந்ததாக கூறப்படுகிறது. இதை, இம்ரானின் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஆனால், சர்தாரியின் பாக்., மக்கள் கட்சியினர், இந்த உரையாடல் நடந்திருக்க வாய்ப்புள்ளதாககூறுகின்றனர்.
Advertisement