`எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பது பிக் பாஸுக்கு பொருந்துமோ இல்லையோ ஐ.பி.எல்-லுக்கு நிச்சயமாய் பொருந்தும். முதல் சீசனின் தொடக்கத்தில் யாருடைய பேவரைட்டாகவும் இருந்திடாத ராஜஸ்தான் கோப்பையை வென்றது முதல் ஜெயிக்க வேண்டிய இடத்திலிருந்து கோப்பைகளைக் கைவிட்ட சென்னை, வாய்ப்பே இல்லை என்கிற நிலையிலிருந்து மீண்டெழுந்த டெக்கான் சார்ஜர்ஸ், இதோ இந்த சீசனில் முதல் டீமாய் வெளியேறிய மும்பை வரை ஐ.பி.எல் அளிக்கும் ஆச்சரியங்களை அதிர்ச்சிகளை எந்த த்ரில்லர் சினிமாக்களினாலும் தந்துவிடமுடியாது.
அதற்குக் கொஞ்சமும் விதிவிலக்கில்லை இந்த சீசன். பலமான அணியாகக் கருதப்பட்ட ராஜஸ்தான் பைனலுக்கு வந்ததில் யாருக்கும் எந்த கேள்வியுமில்லை. ஆனால் பேப்பரில் படுவீக்கான அணியாகக் கருதப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் பைனலுக்கு அதுவும் முதல் ஆளாக அசுர பலத்தோடு வந்ததை காலங்காலமாக கிரிக்கெட்டை மூச்சாக நினைத்து வாழும் வல்லுநர்களே எதிர்பார்த்திருக்கவில்லை.
சாம்சன் டாஸ் ஜெயிப்பது தேர்தலில் தே.மு.தி.க டெபாசிட் வாங்குவதைப் போலத்தான். எப்போதாவது நடக்கும். ஆனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தப் போட்டியிலும் டாஸ் ஜெயித்தார். வழக்கத்திற்கு மாறாய் டாஸ் ஜெயித்ததாலோ என்னவோ வழக்கத்திற்கு மாறாய் பர்ஸ்ட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றங்களுமில்லை. குஜராத் அணியில் அல்ஸாரி ஜோசப்பிற்குப் பதில் பெர்குசன்.
அபாரமான பவர்ப்ளே பௌலராக உருவெடுத்திருக்கும் ஷமிதான் முதல் ஓவர். வெறும் இரண்டே ரன்கள். யஷ் தயாலின் அடுத்த ஓவரிலும் ஐந்தே ரன்கள்தான். ஓப்பனர்களைப் பொறுத்தவரை ஒருவர் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய, இன்னொருவர் இறங்கி வெளுப்பார். ஜெய்ஸ்வால் அணியிலிருந்து ட்ராப் செய்யப்பட்டபோது பவர்ப்ளேயில் நொறுக்குவதை குத்தகைக்கு எடுத்துக்கொண்ட பட்லர், இப்போது ஜெய்ஸ்வால் திரும்ப வந்ததும் அவருக்கு வழிவிட்டு ஒரு பொறுப்பான சீனியராய் அடக்கி வாசிக்கிறார். அதை உணர்ந்தது போல ஷமியின் இரண்டாவது ஓவரில் பவுண்டரியும் சிக்ஸருமாய் வெளுத்தார் ஜெய்ஸ்வால். 14 ரன்கள்.
யஷ் தயாலின் அடுத்த ஓவரில் சரியாக பாடி லைனில் வந்த பந்தை பைன் லெக் பக்கம் தூக்கி ஒரு சிக்ஸ் அடித்தார் ஜெய்ஸ்வால். அடுத்த பந்தையும் அதே லைனில் தயால் வீச மீண்டும் தூக்கியடிக்க ஆசைப்பட்டு சாய் கிஷோரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்கோர் நான்கு ஓவர்கள் முடிவில் 31/1.
ஒன் டவுனில் இறங்கிய சாம்சன் வந்த முதல் பாலிலேயே பவுண்டரி அடித்து கணக்கைத் தொடங்கினார். ஆனாலும் பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 44/1 என்கிற அளவிலேயே இருந்தது. ஏழாவது ஓவரில் பட்லர் அடுத்தடுத்து பவுண்டரி அடித்தும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் நூறைத் தாண்டவில்லை. இதனால் ஸ்கோரும் முதல்நாள் ஸ்கூலுக்குப் போகும் குட்டிப்பையன் போல முரண்டு பிடித்தது. ஒன்பதாவது ஓவர் ஹர்திக் பாண்டியா. இரண்டாவது பந்தை சாம்சன் மோசமாக மிஸ் ஜட்ஜ் செய்ய டாப் எட்ஜில் எகிறி மீண்டும் சாய் கிஷோர் கையில் தஞ்சமடைந்தது பந்து.
அடுத்துவந்த படிக்கல், ‘என்ன அடிச்சாலும் என்னை டி20 டீமுக்கு எடுக்கப் போறதில்ல. அதனால டெஸ்ட் டீமுக்கு எடுக்குற மாதிரியாவது ஆடுறேன்’ என செலக்டர்களுக்கு சைகைக் காட்டிவிட்டு பந்தைத் தொட்டுத் தடவிக்கொண்டிருந்தார். எட்டாவது பந்தில்தான் தன் முதல் ரன்னையே எடுத்தார்.
‘ஒண்ணு தூங்குற இல்ல தூர்வாருற. ஒழுங்கா அடி’ என பட்லர் அந்த எண்டிலிருந்து கத்திய பிறகே கோபம் வந்து ரஷித்தை இழுத்து சாத்தினார். அது அழகாக ஷமி கையில் போய் சேர்ந்தது. ‘நீங்க உங்களுக்கு நல்லது நடக்குறதா நினைச்சு எங்களுக்குத்தான்யா நல்லது பண்ணியிருக்கீங்க’ எனக் கையெடுத்துக் கும்பிட்டார் ராஜஸ்தான் கோச் சங்ககாரா. அடுத்த ஓவர் மீண்டும் பாண்டியா. முதல் பந்திலேயே ராஜஸ்தான் பயந்துகொண்டிருந்த அந்த அசம்பாவிதம் நடந்தது. இந்த மொத்த சீசனிலும் ஆடப்பட்ட மிக மோசமான ஷாட் அது எனப் பந்தயமே கட்டலாம். சூப்பர் சூப்பர் ஷாட்களாக ஆடிக்கொண்டிருந்த பட்லர் மிக சப்பையாக கீப்பருக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருக்குமே அவர்மீது கோபம் வந்திருக்கும்போல. ஹெல்மெட்டை ஒருபக்கமும் க்ளவுஸை இன்னொருபக்கமும் தூக்கி எறிந்துவிட்டு பெவிலியனுக்குள் போனார். ஸ்கோர் 79/4.
ஐந்து முழுநேர பௌலர்களோடு களமிறங்கும் பழக்கத்தை இந்த சீசனில் தொடங்கி வைத்தது ராஜஸ்தான். ஜெய்ஸ்வால், பட்லர், சாம்சன், படிக்கல் என டாப் ஆர்டர் கொஞ்சம் அதிரடி கொஞ்சம் நிதானம் என ஆடக்கூடியது. டெத் ஓவர்களில் ஹெட்மெயர் அடித்தால் உண்டு. அவருக்கு அடுத்து இறங்கும் ரியான் பராக்கும் சரி, ஆல்ரவுண்டர் இடத்தில் இறங்கும் அஷ்வினும் சரி, பினிஷர் ரோலுக்கு செட்டாகும் பேட்ஸ்மேன்கள் கிடையாது.
சென்னையுடனான ஆட்டத்தில் அஷ்வின்தானே அடித்தார் எனச் சொல்லலாம். `இழப்பதற்கு எதுவுமில்லை’ என்கிற லீக்கின் கடைசி ஆட்டத்தில் செகண்ட் பேட்டிங்கில் ஆடுவதற்கும் பைனலில் விக்கெட்கள் போன நிலையில் முதல் இன்னிங்கிஸில் ஆடுவதற்கும் எக்கச்சக்க வித்தியாசம் இருக்கிறது. முழுநேர பேட்ஸ்மேனாய் அனுபவம் பெற்ற ஒருவரால் மட்டுமே இந்தச் சூழ்நிலையை சமாளித்து ஆடமுடியும்.
முதல்முறையாக பேட்டிங் ஆர்டரில் போதிய டெப்த் இல்லாத சூட்டை அனுபவித்தது ராஜஸ்தான். ரஷித் ஒருபக்கம் சுழல் மேஜிக் காட்டிக்கொண்டிருக்க பாண்டியா மறுபக்கம் சர் சர்ரென பந்தை இறக்க, ஹெட்மெயர் பந்தைக் கணிப்பதற்கே படாதபாடு படவேண்டியதாய் இருந்தது. ஹர்திக்கின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் அவரிடமே கேட்ச்சைக் கொடுத்து நடையைக் கட்டினார். நான்கு ஓவர்கள் போட்டு 17 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்கள். அதுவும் சாம்சன், பட்லர், ஹெட்ம்யர் என மூன்று ரூட்டுதலைகள்.
Captain’s Knock என்பார்களே, அதுபோல இது Captain’s spell. ஒரு பௌலராகவும் தன் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாய் இருக்கப்போகிறது என்பதை லட்சக்கணக்கானவர்கள் முன்னிலையில் பி.சி.சி.ஐக்கு அறிவித்தார் ஹர்திக். ஸ்கோர் 15 ஓவர்கள் முடிவில் 94/5.
ஸ்கோர்போர்டு பிரஷர் தாங்கமுடியாமல் அஷ்வினும் வெளியேற, பேட்டை இஷ்டத்திற்கு சுற்றி சிலபல ரன்கள் தேற்றிய போல்ட்டும் 11 ரன்களில் வெளியேறினார். மெக்காயும் பராக்கும் தட்டுத் தடுமாறி ஸ்கோரை 120-ஐத் தாண்ட வைத்தார்கள். ‘அதென்ன பௌலிங் போடுற எல்லாருக்கும் விக்கெட் வாரிக் கொடுக்குறீங்களாம்? இருக்குறதுலயே சீனியர் எனக்கு எதுவுமில்லையா?’ என ஷமி புலம்ப, ‘ண்ணே… நாகராஜண்ணே… நல்லா இருக்கியாண்ணே’ என நெகிழ்ந்து விஜய் சேதுபதியாகவே மாறி தன் விக்கெட்டை கடைசி பந்தில் விட்டுக்கொடுத்தார் பராக்.
ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 130/9. 2017 பைனலில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கெதிராக மும்பை அணி எடுத்ததைவிட ஒரு ரன் அதிகம். மும்பை டிபெண்ட் செய்து கோப்பையை வென்றது போலவே தங்களுக்கும் ஒரு வாய்ப்பிருப்பதாக நம்பி களமிறங்கினார்கள் ராஜஸ்தான் பௌலர்கள்.
அதற்கு முதல் ஓவரிலேயே சூப்பரான வாய்ப்பும் வந்தது. போல்ட் லெக் ஸ்டம்ப் லைனில் வீசிய பந்தை கில் ப்ளிக் செய்ய பார்வர்ட் ஸ்கொயர் லெக்கில் இருந்த சஹாலிடம் வேகமாய் போனது பந்து. பிடித்தபின் டொய்ங்கென கோட்டைவிட்டார் சஹால். Catches win Matches.
அடுத்த ஓவரில் பிரஷித் வீசிய பந்தை எதிர்கொண்ட சாஹாவின் பேட்டுக்கும் உடலுக்கும் நடுவே மெட்ரோ ரயிலே போகுமளவிற்கு இடைவெளி இருந்தது. அந்த கேப்பில் பிரஷித் கெடா வெட்ட, சாஹா அவுட். போல்ட் வீசிய மூன்றாவது ஓவர் மெய்டன். நான்காவது ஓவரில் வைட் பவுண்டரி புண்ணியத்தில் 11 ரன்கள். பெயருக்கேற்றார் போல மின்னல் வேகத்தில் போல்ட் வீசிய பந்துகளைக் கணிக்கமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த வேட், பரிதாபமாய் ஷார்ட் மிட்விக்கெட்டில் பராக் கையில் கேட்ச் கொடுத்தார்.
இப்போது ஒரு பேட்ஸ்மேனாகவும் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பொறுப்பு ஹர்திக்கிற்கு. கில் சும்மாவே பொறுமையாகத்தான் ஆடுவார். ஹர்திக்கின் பேட்டிங் ஸ்டைலும் மாறிவிட்டதால் மத்தியான செஷனில் மேத்ஸ் க்ளாஸைக் கவனிப்பதுபோலத்தான் இருந்தது மேட்ச்சும். 8 ஓவர்கள் முடிவில் 38/2.
ஒன்பதாவது ஓவரில் அதிசயமாய் 10 ரன்கள் வர, அடுத்த ஓவரில் அதற்கும் முட்டுக்கட்டை போட்டார் சஹால். மேலும் ஒருமுறை கேட்ச் கண்டத்திலிருந்து தப்பித்தார் கில். டார்கெட் கம்மிதான் என்பதால் ரிஸ்க்கே எடுக்காமல் ஆடுவது, ஓவருக்கு ஒரு பவுண்டரி மட்டும் எப்படியாவது அடித்துவிடுவது என டிபிக்கல் டி20 பார்ட்னஷிப்பைக் கொடுத்தார்கள் இருவரும். இதனால் ரன்ரேட்டும் சீராகவே இருந்தது.
14வது ஓவரில் சஹாலின் அசத்தலான லெக் பிரேக் பௌலிங்கில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார் ஹர்திக். ஸ்கோர் இப்போது 86/3. 40 பந்துகளில் 44 ரன்களே தேவை. கைவசம் ஏழு விக்கெட்கள். இப்படியான நிலைமையிலிருந்து தோற்பதற்கு எந்த டீமாலும் முடியா… இல்லை இல்லை, ஆர்.சி.பி என்ன தக்காளித்தொக்கா? `அதென்ன நீங்க எதிர்பார்க்குறப்போ அசிங்கமா நாங்க ஜெயிக்குறது. கண்டிப்பா தோத்துத்தான் போவோம்’ என வீம்பாக ஆடித் தோற்பவர்கள் அவர்கள். ஆனால் குஜராத் ஆர்.சி.பி இல்லையே.
பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளில் இருந்தவரை மில்லரின் நிலையே வேறு. ‘நான் வாயைக் குவிக்க யாரோ டப்பிங் கொடுக்கிறாங்கள்’ என தெனாலி கமல் போல பினிஷர் ரோலில் பாவ்லா காட்டிக்கொண்டிருந்தார். ஆனால் குஜராத்திலோ, ‘நீ………ல வானம்’ என ஹை பிட்ச்சில் அசரடிக்கும் கமல் போல பொளந்து கட்டுகிறார்.
மில்லருக்காகவே அஷ்வினைப் பொத்தி பொத்தி வைத்திருந்த சாம்சனும் அஷ்வினிடம் பந்தைக் கொடுத்தார். ஆனாலும் ஒன்றும் வேலைக்காகவில்லை. 16வது ஓவரில் 12 ரன்கள். பிரஷித் வீசிய அடுத்த ஓவரில் 13 ரன்கள். அஷ்வின் வீசிய மூன்றாவது ஓவரில் மேலும் ஐந்து ரன்கள். 19-வது ஓவரின் முதல் பந்திலேயே லெக் சைடில் ஒரு சிக்ஸ். ஸ்டைலாய் கோப்பையை முத்தமிட்டது குஜராத் அணி. கேப்டன் ஹர்திக்தான் மேன் ஆப் தி மேட்ச்.
தொடர் முழுவதும் தங்களுக்குக் கைகொடுத்த ஐந்து பௌலர்கள், ஆறு பேட்ஸ்மேன்கள் பார்முலா சரியாக பைனலில் வந்து சொதப்பும் என ராஜஸ்தான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காது. ஆனாலும் ஆட்டம் முடிந்தபின் ‘நாங்கள் இந்த பார்முலாவை இன்னமும் நம்புகிறோம்’ என்றார் சாம்சன். மறுபக்கம் வார்னேவுக்காக கோப்பை வெல்ல நினைத்த ராஜஸ்தானை வீழ்த்தினாலும் வார்னேவுக்கான மரியாதையை தக்கமுறையில் செலுத்தியிருக்கிறது குஜராத் அணி.
முதல் சீசனில் அண்டர்டாக் எனக் கருதப்பட்ட ராஜஸ்தானை வெற்றி பெறச் செய்த வார்னேவுக்கு, சீசன் தொடக்கத்தில் மிக பலவீனமான அணி எனக் கருதப்பட்ட குஜராத் கோப்பை வென்று மரியாதை செலுத்துவதுதானே நியாயமாய் இருக்கமுடியும். தன் சொந்த மண்ணில் சொந்த அணியை வழிநடத்தி ஒரு பேட்ஸ்மேனாய், ஒரு பௌலராய், ஒரு கேப்டனாய் ‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என பலமான ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
மில்லர், சாஹா, கில், ரஷித், திவேதியா என ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு வீரரின் வழியே வென்று கோப்பையையும் கைபற்றிவிட்டது குஜராத். இதுவே தொடருமா இல்லை இவர்கள் ஒன் சீசன் வொண்டரா என்பது அடுத்த சீசனில் தெரிந்துவிடும். போக, கம்பேக்கிற்காகவே பெயர் போன சென்னையும் மும்பையும் தங்களை முழுதாய் சீரமைத்துக்கொண்டு அடுத்த சீசனில் களமிறங்கும்.
ஆதலால், இப்போதிருந்தே அடுத்த சீசனுக்கு ஏங்கத் தொடங்கிவிட்டன கோடிக்கணக்கான கிரிக்கெட் இதயங்கள். அதுதானே ஐ.பி.எல்லின் மேஜிக். காத்திருப்போம்.