பாக்தாத் : கால்நடைகளின் மேலிருக்கும் உண்ணிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஈராக் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த காய்ச்சல், மூக்கின் வழியாக ரத்தப்போக்கு ஏற்பட்டு மரணத்தை ஏற்படுத்துவதால், ஈராக் அரசு கவலையில் ஆழ்ந்துஉள்ளது.மேற்காசிய நாடான ஈராக்கில், கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ரத்தப்போக்கு காய்ச்சல், 1979ல் முதல் முறையாக கண்டறியப்பட்டது.
கால்நடைகளில் இருக்கும் உண்ணிகள் மூலமாக மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.கடும் காய்ச்சல் ஏற்படுவதுடன், உடலுக்குள்ளும் குறிப்பாக, மூக்கின் வழியாக ரத்தப்போக்கு ஏற்படும்.பாதிப்பு ஏற்படும் ஐந்தில், இருவர் உயிரிழக்கும் அளவுக்கு மிகவும் மோசமானதாக இந்த நோய் கருதப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், கால்நடைகளை கிருமிநாசினி மூலம் துாய்மைபடுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் இது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், இவ்வாறு தூய்மைபடுத்தும் பணி நடக்கவில்லை. அதனால் தற்போது இந்த ரத்தப்போக்கு காய்ச்சல் மிகவும் தீவிரமாக உள்ளது. இதற்கு தடுப்பூசி ஏதும் கிடையாது.ஈராக்கில் இந்தாண்டு இதுவரை, 111 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு, 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கால்நடைகளை கிருமிநாசினி மூலம் துாய்மைபடுத்தும் பணி துவங்கியுள்ளது. மேலும், இறைச்சிக் கூடங்களிலும் துாய்மை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement