திருவனந்தபுரம்: மேடையில் பாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு பாடகர் எடவா பஷீர் திடீரென்று மரணம் அடைந்தார். கேரள மாநிலம் கொல்லம் அருகிலுள்ள எடவா பகுதியை சேர்ந்தவர், பஷீர் (78). பழம்பெரும் மேடை பாடகர். ஆரம்பகாலத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், ரஃபி ஆகியோரின் பாடல்களை கேட்டு பயிற்சி பெற்ற அவர், பிறகு பள்ளி மற்றும் கல்லூரியில் பல பரிசுகள் பெற்றுள்ளார். தனது நண்பர்களுடன் இணைந்து, அனைத்து கேரள இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான கூட்டமைப்பு உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டார். கானமேளா இசைக் கச்சேரியிலும் பாடியுள்ளார். மலையாளத்தில் கே.ஜே.ஜாய் இசையில் ‘ரகுவம்சம்’ படத்தில் அறிமுகமான எடவா பஷீர், வாணி ஜெயராமுடன் இணைந்து ‘முக்குவனே சினேகிச்ச பூதம்’ படத்திலும், பிறகு எஸ்.ஜானகி உள்பட முன்னணி பாடகிகளுடன் இணைந்து பாடியுள்ளார்.கேரளா முழுக்க கோயில் விழாக்களில் பாடியுள்ள எடவா பஷீர், நேற்று ஆலப்புழாவில் இசை நிறுவனத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் மேடையில் நின்று பாடிய போது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளின்றி எடவா பஷீர் மரணம் அடைந்தார். மாரடைப்பு ஏற்பட்டதுதான் அவரது மரணத்துக்கு காரணம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். எடவா பஷீருக்கு ரஷீடா, ரெஹ்னா என்ற மனைவிகளும் மற்றும் உல்லாஸ், உமேஷ், உஷுஸ் சீட்டா, பீமா ஆகிய மகன்கள், மகள்களும் இருக்கின்றனர்.