காத்மாண்டு: காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட நேபாள விமானம் ஆற்றில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அப்பகுதி முழுவதும் பனி படர்ந்து காணப்படுவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 4 இந்தியர்கள் உட்பட 22 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நேபாள நாட்டின் தாரா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான 9 என்ஏஇடி சிறிய ரக விமானம், தலைநகர் காத்மாண்டுவுக்கு வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் உள்ள பொக்ராவில் இருந்து நேற்று காலை 9.55 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் பைலட் உட்பட விமான நிறுவனத்தை 3 பேரும் இருந்தனர். இந்த விமானம் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கில் 80 கி.மீ.தொலைவில் உள்ள ஜோம்சோம் நகர் விமான நிலையத்தில் காலை 10.15 மணிக்கு தரை இறங்கியிருக்க வேண்டும். ஆனால். விமானம் அங்கு வந்து சேரவில்லை.
மொத்தம் 22 பேருடன் புறப்பட்ட இந்த விமானம் 15 நிமிடங்களில் மாயமானது. கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு 15 நிமிடங்களில் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தவளகிரி என்ற மலைப்பகுதிக்கு மேலே பறந்து சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தொடர்பை இழந்ததாக விமானநிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
காணாமல் போனதையடுத்து விமானத்தை் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதே நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதா என்பது தெரியவில்லை என்று தாரா ஏர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனிடையே ஜோம்சோம் நகருக்கு அருகே காசா பகுதியில் அதிக அளவில் சத்தம் கேட்டதாக அங்கிருந்து வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவித்தன.
தேடும் பணி தீவிரம்: அநேகமாக தவளகிரி மலைப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் டிஎஸ்பி ராம் குமார் தானி தெரிவித்துள்ளார். இதையடுத்து தவளகிரிபகுதியைச் சுற்றிலும் ஹெலிகாப்டர்கள் மூலம் விமானத்தைத் தேடும் பணி நேற்று காலை முதல் நடைபெற்றது.
இந்நிலையில், மாயமான விமானம் தவளகிரி அருகே முஸ்டாங் மாவட்டம் கோவாங் கிராமத்தில் உள்ள லாம்சே ஆற்று முகத்துவாரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து கோவாங் கிராமத்தைச் சேர்ந்தமக்கள், நேபாள ராணுவத்துக்குதகவல் தெரிவித்துள்ளனர். இந்தகிராமம் மணாபதி ஹிமால் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை மீட்புப் படையினர் கண்டறிந்த நிலையில் அங்கு தற்போது மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலையேற்ற வீரர்கள்மணாபதி ஹிமால் பகுதிக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
அது அடர்ந்த மலையடிவாரப் பகுதி என்பதாலும், பனி சூழ்ந்து காணப்படுவதாலும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தாரா ஏர் நிறுவனத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களும், நேபாள ராணுவ ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளன.
விமானத்தில் பயணம் செய்த 22 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்று நேபாள நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். பனி சூழ்ந்து காணப்படுவதையடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட 4 ஹெலிகாப்டர்களும் காத்மாண்டுவுக்கு வந்து சேருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தாரா ஏர் நிறுவன பொது மேலாளர் பிரேம்நாத் தாக்குர் தெரிவித்தார்.
அதிக உயரத்திலிருந்து விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளதால் அதில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
4 இந்தியர்கள்: இந்த விமானத்தில் பயணித்த 4 இந்தியர்களும் மகாராஷ்டிர மாநிலம்தாணே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான இந்த சிறிய ரக விமானம் 43 ஆண்டு பழமை வாய்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் விமானம் தரையிலிருந்து 12,825 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.
பைலட் செல்போன்: விமானத்தை இயக்கிய கேப்டன் பிரபாகர் பிரசாத் கிமிரே, நீண்ட நேரம் விமானத்தை இயக்கிய அனுபவத்தை பெற்றவர். அவரது செல்போன் சிக்னலை வைத்து விமானம் விழுந்த இடத்தை நேபாள தொலைதொடர்புத் துறையினர் உதவியுடன் ராணுவத்தினர் கண்டுபிடித்ததாக தெரிவித்தனர்.