திருமலை: ‘வரலாற்றில் இல்லாத அளவில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், ஏழுமலையான் தரிசனத்துக்கு 2 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், யாரும் வர வேண்டாம்,’ என்று தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், நேற்று முன்தினம் மாலை வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடம் வரை 4 கிலோ மீட்டருக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கூட்டத்தில் கடும் அவதிக்குள்ளாகினர். நேற்றும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று திருப்பதிக்கு வந்தவர்களும் 2 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் தலைமை செயல் அதிகாரி தர்மா ஆய்வு செய்து வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அன்ன பிரசாதம், குடிநீர், மோர், காபி ஆகியவை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், அவர் கூறியதாவது: திருமலை வரலாற்றில் இதுவரை எப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது. வழக்கமாக வைகுண்ட ஏகாதசி மற்றும் பிரமோற்சவத்தில் கருட சேவை அன்று இருப்பதை போன்று எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. தற்போது வரிசையில் வரக்கூடிய பக்தர்கள் 2 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 4,500 பக்தர்கள் மட்டுமே சுவாமியை தரிசிக்க வசதிகள் உள்ளது. ஆனால், ஒரு மணி நேரத்திற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் 2 நாட்கள் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருப்பதால் சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, தேவஸ்தானத்திற்கு ஒத்துழைப்பு அளித்து திருப்பதிக்கு வருவதை தற்போதைக்கு தவிர்க்க வேண்டும். புதிதாக வரக்கூடிய பக்தர்கள் தங்கள் பயணத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.* ஒரே நாளில் 89,318 பேர் தரிசனம்திருப்பதியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 89 ஆயிரத்து 318 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் 48 ஆயிரத்து 509 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு எண்ணப்பட்டது. இதில் 3.76 கோடி காணிக்யைாக கிடைத்தது.