புது டெல்லி: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சித்து மூஸ் வாலா. பிரபல பஞ்சாபி பாடகரான இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மான்சா தொகுதியில் சித்து மூஸ் வாலாவுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், 63,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மிவேட்பாளரிடம் தோல்வியடைந்தார் சித்து மூஸ் வாலா.
இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த 424 பேருக்கு வழங்கப்பட்டு வந்து போலீஸ் பாதுகாப்பை முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அரசு நேற்று முன்தினம் வாபஸ் பெற்றது. அதில் சித்து மூஸ் வாலாவும் ஒருவர். இதனிடையே, நேற்று மான்சாவிலுள்ள தனது சொந்த கிராமத்துக்கு சித்து மூஸ் வாலா 2 நண்பர்களுடன் காரில் சென்றார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சித்து மூஸ் வாலா உயிரிழந்தார். இந்த சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை மிரட்டல் இருந்த நிலையில் அவருக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ்பெற்றதற்கு பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரண் சிங் சாப்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.