மாநிலங்களவைத் தேர்தலுக்கு இன்று (மே 30) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள ப.சிதம்பரம், திமுகவுக்கு, தோழமைக் கட்சிகளுக்கும் தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “இன்று பகல் 12 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மாநிலங்களவைத் தேர்தலில் என் வேட்பு மனுவை அளிக்கிறேன் என்று மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு என்னுடைய உளமார்ந்த நன்றி! எங்களுக்கு ஆதரவு தருகின்ற திமுக, அதன் தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி” என்று பதிவிட்டுள்ளார்
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அதிமுக எம்பிக்களான நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. அதனால் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாகும் 57 எம்பிக்கள் இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாநிலங்களவை எம்பி தேர்வாவதற்கும் 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி திமுக 4 இடங்களுக்கும், அதிமுக 2 இடங்களுக்கும் போட்டியிடலாம். இந்நிலையில் 18 எம்எல்ஏக்களை கொண்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸூக்கு ஒரு இடத்தை திமுக விட்டுக்கொடுத்துள்ளது.
திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் போட்டியிடுகின்றனர். அதிமுகவுக்கு 66 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜக, பாமக ஆதரவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலர் ஆர்.தர்மர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.