இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என்று மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்திருந்த நிலையில், அதன்படி இன்று இந்த வழிதடத்தில் ரயில் சேவை தொடங்கியது. மதுரை – ராமேஷ்வரம் இடையில் காலை மாலை என இருவேளைகளாக இயக்கப்பட்ட ரயில் சேவை, கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த இரு ரயில்களும் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கையை வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மனு கொடுத்திருந்தார். அதையடுத்து கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய மதுரை – ராமேஸ்வரம் காலை நேர பயணிகள் ரயில், ராமேஸ்வரம் – மதுரை மாலை நேர பயணிகள் ரயில்களை இன்று முதல் மீண்டும் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு பின் இயக்கப்படும் இவ்விரு வழித்தட ரயில்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், உச்சிபுளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம், சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ரயில், காலை 6.35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. நீண்ட நாளுக்கு பிறகு இந்த வழிதடத்தில் ரயில் இயக்கப்படுவதால், பலரும் பயன்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க… பள்ளி விடுமுறை காரணமாக உறவினர் வீட்டுக்கு வந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM