டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டதின்மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பெருந்தொற் றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் திட்டத்தில் இருந்து உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று தீவிரமாக நாடு முழுவதும் பதவிபோது, 2020ம் ஆண்டு மார்ச் 27ந்தேதி அன்று பிஎம்கேர்ஸ் என்ற திட்டம் ( Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM CARES Fund) தொடங்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து நிதி பெற்றப்பட்டது.
இந்த நிலையில், பி.எம். கேர்ஸ் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள குழந்தைகளில் பள்ளிக்கு செல்வோருக்கு கல்வி உதவித்தொகையை இன்று காலை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்ட கணக்கியல் புத்தகம் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டையும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தினால் பயனடையும் குழந்தைகள், தங்களது பாதுகாவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவருடன் காணொலி வாயிலாக இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.