தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், ஞாயிற்றுக்கிழமை கோடீஸ்வரர்களாக சிறிது நேரம் வளம்வந்தனர்.
தி நகர் கிளையில் கணக்கு வைத்திருக்கும் 100 ஹெச்டிஎஃப்சி பயனர்களின் வங்கி கணக்கில் தலா ரூ13 கோடி என மொத்த 1300 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஹெச்டிஎஃப்சி வங்கி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கணக்குகளுக்கு சில ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.13 கோடி வரை மட்டுமே பணம் செலுத்தப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாப்ட்வேர் அப்டேட் செய்யும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் உள்ள சில ஹெச்டிஎஃப்சி வங்கிக் கிளைகளின் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறுதலாக பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டது.
ஹெச்டிஎப்ஃசி வங்கியின் பெசன்ட் நகர் கிளையில் கணக்கு வைத்திருக்கும் வி சஞ்சீவி, அவரது வங்கி கணக்கில் திடீரென 3.1 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக பகிர்ந்துள்ளார்.
அதில், ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு பரிவர்த்தனை செய்த பிறகு, அக்கவுண்ட் பேலன்ஸ் செக் செய்து பார்த்தேன். கோடிக்கணக்கில் பணம் காட்டியதும், தொழில்நுட்ப கோளாறு என்பதை புரிந்துகொண்டேன். ஏனெனில், பணம் வந்தததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை. பின்னர், 10 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அக்கவுண்ட் லாகின் செய்தேன். அப்போது, error மெசேஜ் வந்தது. என்னால் பணப்பரிவர்த்தனை செய்யமுடியவில்லை. பின்னர் மாலை கணக்கு சீரானது” என்றார்.
இப்பிரச்சினை ஞாயிற்றுக்கிழமை மாலை சரிசெய்யப்பட்டதையடுத்து, முடக்கப்பட்ட கணக்குகள் விடுவிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிலரது கணக்கில் ரூ13 கோடியும், சிலர் கணக்குகளில் சில ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் வரையும் டெபாசிட் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.