எனக்கு தகுதியில்லையா? நடிகை நக்மா அதிருப்தி!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது காலியாக உள்ள 57 உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில், மாநிலங்களவை தேர்தலில்
காங்கிரஸ்
கட்சி சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி மேலிடம் நேற்று வெளியிட்டது.

ராஜஸ்தானிலிருந்து மூவரும், சத்தீஸ்கரிலிருந்து இருவரும், ஹரியாணா, கா்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்கள். அதன்படி, தமிழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஜெய்ராம் ரமேஷ், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக். பிரமோத் திவாரி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் இருந்து விவேக் தன்கா, சத்திஸ்கர் மாநிலத்தில் இருந்து ராஜீ சுக்லா. ரஞ்சித் ரஞ்சன். ஹாரியாணா மாநிலத்தில் அஜய் மக்கான். மகாராஷ்டிராவில் இருந்து போட்டியிட இம்ரான் பிரதாப்கரி ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாததால் நடிகையும், மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் கடந்த 2003-04 ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என தலைவர் சோனியாக காந்தி உறுதி அளித்திருந்தார். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆனால் 18 வருடங்கள் ஆகியும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இம்ரானுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு தகுதி இல்லையா.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 1 மாநிலங்களவை உறுப்பினர் தேர்வாகப்படக் கூடிய நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த தனக்கு வாய்ப்பளிக்காமல், ராஜஸ்தானைச் சேர்ந்த இம்ரானுக்கு வாய்ப்பளித்ததால் நக்மா தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நக்மாவின் இந்த ட்வீட் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதற்கிடையே, அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.