வழிகாட்டுகிறார் அவதார் இணை நிறுவனர் உமா சங்கர்| Dinamalar

புதுச்சேரி : ‘எதிர்கால தொழில்நுட்பத்திற்கு ஏற்ப படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்தால் வாழ்வில் உச்சம் தொடலாம்’ என அவதார் நிறுவனத்தின் இணை நிறுவனர் உமா சங்கர் பேசினார்.

‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியில், வேலை வாய்ப்பு பெறுவதற்கான திறன்கள் என்ற தலைப்பில், சென்னை அவதார் நிறுவன இணை நிறுவனர் உமாசங்கர் பேசியதாவது:உலகம் வேகமாக மாறி வருகிறது. இன்றைய தலைமுறையினர் 4.0 என்ற நான்காவது தொழில் புரட்சியில் உள்ளனர். இந்த நான்காவது தொழில் புரட்சி, விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மெண்டெட் ரியாலிட்டி, இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், 3டி அச்சு தொழில்நுட்பம் என மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நம்மை நகர்த்திச் செல்கிறது.

விர்ச்சுவல் ரியாலிட்டி
நாம் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வதோ, ஆழ்கடலுக்குள் செல்வதோ எளிதான காரியமல்ல. ஆனால் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தைக் கொண்டு அடர்ந்த காடுகளுக்குள் அல்லது ஆழ்கடலுக்குள் இருப்பதைப் போன்ற உணர்வைப் பெறமுடியும்.

ஆக்மெண்டட் ரியாலிட்டி
இது மேம்படுத்தப்பட்ட யதார்த்தமான தொழில்நுட்பம். நாம் சிக்கலான தொழில்நுட்பம் கொண்ட மின்னணு கருவிகளை கையாளும் போது இது தேவை.ஒரு மின்னணு கருவி செயலிழந்து போகிறது என்றால், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண்ணாடி போன்ற கருவியை கொண்டு, சரி செய்ய இயலும். அதாவது, அந்த கண்ணாடியை பயன்படுத்தும் போது, கருவியில் என்ன பழுது ஏற்பட்டுள்ளது, அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என வழிகாட்டும்.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்
சாதாரண தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் கணினித் தொழில்நுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட செயலை மட்டும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டது.ஆனால் செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரம் என்பது, மனித மூளையைப் போன்று இயல்பாக கற்றல், கேட்டல் மற்றும் செய்தல் ஆகியவற்றை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் சொந்த முறையில் சிந்திக்கவும், முடிவுகளை எடுக்கவுமான ஆற்றலைக் கொண்டதாகும்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் தற்போது வெகுவாக முன்னேறி உள்ளன.
3டி அச்சு இயந்திரத்தில் அச்சடிக்க முடியாத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு நாம் அணியும் ஆடைகள் தொடங்கி, வாகனங்கள், கட்டுமானப் பகுதிகள், நம் உடலுடன் பொருத்தக் கூடிய செயற்கை கை, கால்கள், எலும்புகள் தயாரிக்கப் படுகின்றன.கிட்டத்தட்ட நமக்குத் தேவையான எல்லாவற்றையுமே இன்று 3டி பிரிண்டரைக் கொண்டு அச்சடித்துக் கொள்ளலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.மரபணுக்களை ஆய்வு செய்து புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களைகளைக் கூட செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான முன்னறிவிப்பு புலனாய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இதுமட்டுமின்றி இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் எனப்படும் இணையதளத்தை மையப்படுத்தி இயங்கக்கூடிய மின் பொருட்களின் தொழில்நுட்பத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும்.உலகை ஆளும். அனைத்து துறைகளிலும் தானியங்கியும், இயந்திரங்கள் கற்றுணர்தலும் வேகமாக நடந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் எதிர்கால தொழில்நுட்ப மாற்றங்களை கருத்தில் கொண்டு, படிப்புகளை தேர்வு செய்தால் வாழ்வில் உச்சம் தொடலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.