தெலங்கானா மாநிலத்தில், முதலமைச்சர் சந்திரசேகர் ராவை, அமைச்சர் மல்லா ரெட்டி புகழ்ந்து பேசியதால், ஆத்திரமடைந்த பொது மக்கள், அவரது பாதுகாப்பு வாகனம் மீது செருப்பு மற்றும் கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை மாநிலமான தெலங்கானாவில், முதலமைச்சர்
சந்திரசேகர் ராவ்
தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று (ஞாயிறு) மாலை அரசியல் சார்பற்ற சமூக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் தெலங்கானா மாநில தொழிலாளர் துறை அமைச்சர் மல்லா ரெட்டி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர், முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசை புகழ்ந்து பேசினார். இதனால், ஆத்திரமடைந்த சிலர் ரகளையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தனது பேச்சை முடித்து கொண்ட அமைச்சர் மல்லா ரெட்டி கூட்டத்தில் இருந்து வெளியேறி தனது காரில் புறப்பட்டார். எனினும், கூடியிருந்த கும்பல் அவரது காரை நோக்கி காலணிகளையும், நாற்காலிகளையும், தண்ணீர் பாட்டில்களையும் வீசி எறிந்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சரின் பாதுகாப்பிற்காக வந்த போலீசார் அவருடைய காரை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பு அளித்து, அந்த பகுதியை விட்டு அவர் வெளியேற உதவினர். மேலும், தொண்டர்களும் சிறிது தூரம் காரை பின் தொடர்ந்து ஓடினர்.
இது குறித்து பாஜக தேசிய ஐ.டி. துறை பொறுப்பு வகிக்கும் அமித் மாளவியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சந்திரசேகர் ராவின் தெலங்கானா அரசின் புகழ் இது போன்று உள்ளது. கத்கேசரில் நடந்த ரெட்டி மகா சபை கூட்டத்தில் அமைச்சர் மல்லா ரெட்டிக்கு எதிரான கோஷங்கள் எழுந்துள்ளன. தெலங்கானா அரசை புகழ்ந்த அமைச்சர் பேச்சுக்கு எதிராக சிலர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இறுதியில் போலீசார் வந்து அவரை பாதுகாப்புடன் வெளியேற செய்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே, பொதுக்கூட்டத்தில் நடந்த சம்பவத்திற்கு தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி தான் காரணம் என, அமைச்சர் மல்லா ரெட்டி குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து பேசிய அவர், தன் மீதான காழ்ப்புணர்ச்சியால் தன்னை கொல்ல
ரேவந்த் ரெட்டி
சதித்திட்டம் தீட்டி வருவதாகவும், பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு 100 குண்டர்களை அனுப்பி என்னை கொல்ல முயற்சித்துள்ளார் என்றும், கடந்த எட்டு ஆண்டுகளாக, தன்னை பிளாக்மெயில் செய்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.