நாமக்கல்லில் தனது ரசிகர் ஒருவர் சாலை விபத்தில் உயிழந்ததைக் கேள்விப்பட்ட நடிகர் சூர்யா, அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார் சூர்யா.
நாமக்கலை சேர்ந்தவர் ஜெகதீஷ். வயது 27. நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார் ஜெகதீஷ். இவருக்கு திருமணம் ஆகி மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் லாரி ஒன்று அவரது பைக்கின்மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். ஜெகதீசை சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக நாமக்கல்லில் உள்ள அவரது வீட்டிற்கு நடிகர் சூர்யா சென்றிருக்கிறார். ஜெகதீஷின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். ஜெகதீஷிற்கு மனைவி ராதிகா, மற்றும; அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
ரசிகரின் வீட்டுக்கு சூர்யா சென்றது குறித்து அந்த பகுதி சூர்யா தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி ஹரியிடம் பேசினோம். “சென்னையில் இருந்து சென்ற சூர்யா, நாமக்கலுக்கு ஏழு மணியளவில் வந்து சேர்ந்திருக்கிறார். ஜெகதீஷின் வீட்டிற்கு கிட்டத்தட்ட அரை மணிநேரம் செலவிட்டிருக்கிறார். பொதுவாக ரசிகர் யாரேனும் இதுபோல இறந்துவிட்டால், அவரின் குழந்தைகளுக்கு சூர்யா சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யப்படுவதுதான் சூர்யாவின் வழக்கம். இறந்துபோன ஜெகதீஷின் மனைவி படித்திருப்பதால், அவரது படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவும், குழந்தை இனியா விரும்பிய படிப்பிற்கு உதவுவதாகவும் சூர்யா உறுதியளித்திருக்கிறார். தவிர நாமக்கல் ரசிகர் மன்ற தலைவர் நரேஷிடம், ஜெகதீஷின் குடும்பத்தை ஃபாலோ அப் செய்யப் சொல்லியிருக்கிறார்” என்றார்