புதுச்சேரி : ‘சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், கெமிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் படிப்புகளை படித்தால் வேலை வாய்ப்பு அதிகம்’ என உதவி பேராசிரியர் அரவிந்த்குமார் பேசினார்.
‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியில் கோவை ஸ்ரீகிருஷ்ணா டெக்னாலஜி கல்லுாரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை உதவிப் பேராசிரியர் அரவிந்த்குமார் பேசியதாவது:
பள்ளிகளில் பிளஸ் 2 வரை இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவுகளை எடுத்து படிப்போம். இந்த பாடப்பிரிவுகள் இன்ஜினியரிங் படிக்க உதவுகிறது.இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களை நடைமுறையில் புகுத்தி படிப்பதுதான் இன்ஜினியரிங் படிப்பு. நான்காம் ஆண்டு திட்ட அறிக்கை தயாரிக்கும் போது கூட இவை பயன்படும். எனவே இந்த பாடங்களை பிளஸ் 2 வரை ஆர்வமாக படியுங்கள்.
சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், கெமிக்கல் இன்ஜினியரிங் ஆகியவை ஒருங்கிணைந்த பொறியியல் படிப்புகள். இந்த நான்கு இன்ஜினியரிங் ஒருங்கிணையாமல் வீடு கட்ட முடியாது.இதேபோன்று பாலம், ரோபோட், விமானம், கம்ப்யூட்டர், ரயில், கார் இன்ஜின் என பல துறைகளில் இந்த ஒருங்கிணைந்த பொறியியல் படிப்புகளின் தாக்கம் உள்ளது.இப்படிப்புகளை படித்தால் வேலை வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் படிப்புகளை பி.இ., அல்லது பி.டெக்., என்ற வகையில் படிக்கலாம்.
தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எலக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் மக்களை திருப்பி உள்ளது. எலக்ட்ரிக் வாகன பேட்டரிகளை மேம்படுத்துவது, அதனை பாதுகாப்பாக அழிப்பது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இத்துறையில், கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.பயோ டீசல் தொழிலிலும் வேகமாக ஆராய்ச்சி நடந்து வருகிறது. இத்துறையிலும் கெமிக்கல் இன்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர்.
கோர் இன்ஜினியரிங் எடுத்து படித்தால் சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு கூட செல்லாம். அங்கு மேற்பார்வையாளர் பணியில் சேரலாம்.ஆனால் எந்த ஒரு இன்ஜினியரிங் படிப்பு எடுத்து படித்தாலும், அதற்கு கம்ப்யூட்டர் அறிவு அவசியம். எனவே இன்ஜினியரிங் படிக்கும்போதே ஜாவா உள்பட பல்வேறு கணிப்பொறி கோர்ஸ்களை தெரிந்து கொண்டு வேலை வாய்ப்பிற்கான திறன்களை உயர்த்தி கொள்ள வேண்டும். இதேபோல் ஆங்கில மொழி புலமையும் வேலை தேடலுக்கு முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement