ரூர்கேலா: கே பாப் இசை உலகில் முதல் முறையாக ஒடிசாவை சேர்ந்த ஸ்ரேயா லங்கா (18) இடம் பிடித்துள்ளார்.
பாப், ராப், ஜாஸ், டிஸ்கோ, ராக் என உலகம் முழுவதும் பல்வேறு வகையான இசைகள் பிரபலமாக உள்ளன. அந்த வகையில் தென்கொரியாவில் கே பாப் என்ற இசை கோலோச்சி வருகிறது. ஆசியா, லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடு கள், மேற்கத்திய நாடுகளிலும் கே பாப் இசை பிரபலமாக உள்ளது. இந்தியாவில் கே பாப் இசைக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது.
இந்த இசையை மையமாக கொண்டு தென்கொரியாவில் பல்வேறு இசைக் குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றில் பிளாக் ஸ்வான் என்ற இசைக் குழுவும் ஒன்று. இந்த குழுவில் 5 இளம்பெண்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் ஹைமி என்ற பாடகி, ஒரு ரசிகரை ஏமாற்றி பணம் பறித்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டில் பிளாக் ஸ்வான் குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக புதிய பாடகியை குழுவில் இணைக்க சர்வதேச அளவில் தேர்வு நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து 4,000-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 23 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதியில் இந்தியாவின் ஒடிசா மாநிலம், ரூர்கேலா பகுதியைச் சேர்ந்த ஸ்ரேயா லங்கா, பிரேசிலை சேர்ந்த கேப்ரியேலா டால்சின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, இருவரும் பிளாக் ஸ்வான் இசைக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். கே பாப் இசை உலகில் முதல் முறையாக இந்திய பெண் ஒருவர் இடம்பெற்றிருக்கிறார்.
சிறுவயதில் இந்துஸ்தானி இசையில் புலமை பெற்ற ஸ்ரேயா, மேற்கத்திய இசையையும் முழு மையாக கற்றுக் கொண்டார். பாரம் பரிய ஒடிசி நடனம், மேற்கத்திய பாணி நடனம் ஆடுவதில் வல்லவர். இதுரை 30-க்கும் மேற்பட்ட தேசிய, பிராந்திய நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரேயா லங்கா கூறும்போது, “யோகா, ஒடிசி மற்றும் இந்துஸ்தானி இசையில் தினமும் பயிற்சி மேற்கொள்வேன். அதோடு மேற்கத்திய நடனம், இசையிலும் அதிக கவனம் செலுத்தினேன். இந்திய, மேற்கத்திய கலைகளை இணைத்து இறுதிச் சுற்றில் எனது திறமையை வெளிப்படுத்தினேன். இதன் காரணமாகவே பிளாக் ஸ்வான் இசைக் குழுவில் இடம் கிடைத்திருக்கிறது” என்றார்.
தற்போது தென்கொரியாவில் முகாமிட்டுள்ள ஸ்ரேயா லங்கா, கொரிய மொழியை கற்று வருகிறார். அதோடு கடினமான நடனப் பயிற்சியிலும் இசை பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஸ்ரேயா லங்காவின் தந்தை அவினாஷ் லங்கா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தாய் பிரியா குடும்பத்தை கவனித்து வருகிறார். நடுத்தர குடும்ப சூழலில், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மகளின் விருப்பத்துக்கு முன்னுரிமை அளித்து அவருக்கு இசை, நடனத்தில் சிறப்பு பயிற்சி அளிக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். அவர்களின் தியாகத்துக்குப் பலனாக சர்வதேச அளவில் ஸ்ரேயா லங்கா பிரபலமடைந்து உள்ளார்.