தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் நெடுஞ்சாலை, ரயில்வே துறையில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த வாரம் (26-05-2022) நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஹைதரபாத்தில் இருந்து மாலை 4.56 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வந்த பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் காரில் புறப்பட்ட பிரதமர் மோடி, மாலை 5.45 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வந்தார்.
பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் எதிர்கட்சியாக இருந்த தி.மு.க ‘கோ பேக் மோடி’ என்ற வாசகத்தை ட்விட்டரில் சர்வதேச அளவில் ட்டெண்ட் செய்திருந்ததோடு, கருப்பு கொடிகள் காட்டி, பலூன்களில் ‘கோ பேக் மோடி’ என்கிற வாசகத்தை எழுதி பறக்கவிட்டது. ஆனால், இந்த முறை எப்போதும் போல் அல்லாமல், மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் விதமாக தமிழக பா.ஜ.க சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாலை ஓரமாக திரண்டிருந்த மக்களை ரசித்த மோடி ஒரு கட்டத்தில், காரை நிறுத்தி மக்களின் வரவேற்பை ஏற்றார்.
எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் தமிழகத்தில் மோடிக்கான வரவேற்பு, எப்போதும் போல் தி.மு.க-வின் ஐடி விங் நேரடியாக மோடிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் களமிறங்காதது, தமிழகம் தாண்டி வெளிமாநிலங்களில் உள்ள பா.ஜ.க தொண்டர்களும்‘வணக்கம் மோடி’ என்கிற ஹேஷ்டேக்கை ட்ரென்டிங் செய்தது… போன்ற காரணங்களால் உற்சாகமாக இருந்தனர் பா.ஜ.க-வினர். எனினும் “ஒரு மாநிலத்தின் முதல்வர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு மு.க ஸ்டாலின் ஒரு சான்று. முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரை மேடையில் அமர வைத்துவிட்டுப் பேசிய பேச்சு ஒரு அரசியல் நாடகம்” என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்திற்கு பின் இந்த நிகழ்வு விவாதமாக மாறியது.
“என்ன தான் திராவிட மாடல், திராவிடன் ஸ்டாக் போன்ற விஷயங்கள் பேசினாலும் தமிழர்களை உணர்ச்சிப் பூர்வமான அடிமைகளாக மாற்றுவது திராவிட இயக்கத்தின் கை வந்த கலை. திராவிட இயக்கம் என்பதே உணர்ச்சிகளின் அரசியல் தான். அறிவுப்பூர்வமான அரசியலை எந்த காலத்திலும் செய்ததில்லை. தன்னெழுச்சியாக வந்த மொழிப் போராட்டத்தைக் கூட தங்களுக்கான அரசியல் அறுவடையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் திராவிட இயக்கத்தினர்” என்கிறார், பா.ஜ.க மாநில துணைத் தலைவர் புரட்சி கவிதாசன்.
“இப்படிதான் உணர்ச்சிகளைத் தூண்டி ‘எடப்பாடி அரசை எடுபிடி அரசு’ என்றார்கள். ஆனால், அவர்கள் செய்த சாதனைகளை இவர்கள் ஏதும் செய்ய முடியவில்லையே! 7.5% உள் ஒதுக்கீடு மூலம் 405 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குப் போனது, 11 மருத்துவக் கல்லூரிகள் வாங்கியது, இனிமேலும் வாங்கப் போவது என அவர்களின் திட்டங்கள் எல்லாம் மத்திய அரசோடு இணைந்து செயல்பட்டதால் தான் தமிழ்நாட்டுக்கு நிறைய வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர முடிந்தது. ஆனால், தி.மு.க மத்திய அரசோடு உடன்படவும் முடியாமல், முரண்படவும் முடியாமல் இரண்டுகெட்ட நிலைமையில் இருக்கிறது” என்கிறவர், “நீட் ரத்து யாருடைய கோரிக்கை? தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையா? எழுதுபவர்கள் முட்டாள்களா?” என்கிற கேள்வியினை முன்வைக்கிறார்.
“ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு எழுதக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளி, கிராமப்புற மாணவர்கள் எல்லாம் பயனடைந்து வருகிறார்கள். தி.மு.க அரசின் கோரிக்கைகளைத் தமிழ் மக்களின் கோரிக்கைகளாக வைப்பதை ஏற்று கொள்ள முடியாது. முதல்வர் அந்த மேடையில் முன்னிலைப்படுத்திய மூன்று விஷயங்கள் குறித்து ஏற்கனவே டெல்லியில் பிரதமரைச் சந்திக்கும் போது வலியுறுத்தி இருந்ததாகச் சொன்னார்கள். அதைத் தாண்டி வேறு முக்கிய விஷயங்கள் குறித்தோ அல்லது தமிழக மக்களின் முக்கிய தேவைகள் குறித்தான கோரிக்கைகளை முன் வைத்திருக்கலாமல்லவா?
ஜி.எஸ்.டி பாக்கி என்கிறார் முதல்வர். ஆனால், ஜி.எஸ்.டி நிலுவை நான்காம் தேதியோடு முடிந்ததாக நிதி நிலை அறிக்கையில் நிதி அமைச்சர் சொல்கிறார். இதில் யார் சொல்வதை நம்புவது. கச்சத்தீவைக் கொடுத்தது நீங்கள். இப்போது மீட்கச் சொன்னால் எப்படி? நீட் விலக்குதான் கேட்கிறார்கள். அந்த விலக்கு ஒரு முறைக்கு இரு முறை கொடுத்திருக்கிறார்கள். நீட்டை பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும். ஆனால், நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று ஒரு வாரத்தில் அதை ரத்தாக்குவோம் என்று வெத்து அறிக்கை கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளார்கள்.
தமிழக முதல்வர் மேடையில் அரசியல் நாகரீகம் கொஞ்சம் கூட இல்லாமல், திராவிட இயக்கத்திற்கு உரியக் கலாசாரத்தின் மொத்த உருவமாக நடந்து கொண்டார். இது பா.ஜ.க-விற்கன தோல்வி கிடையாது. எழுச்சிக்கரமான வரவேற்பு கொடுத்திருக்கிறோம். தமிழ்நாடு மாறிவருகிறது. திராவிட இயக்கங்கள் கையிலிருந்து தமிழகம் நழுவிக் கொண்டிருப்பதினால் வரும் கதறல் தான் இது. 11 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்த போது தமிழை வழக்காடு மொழியாகக் கேட்க முடியவில்லையா? அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியவில்லையா? இதனால் தான் எங்கள் தலைவர் அண்ணாமலை, ‘நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக நடக்கட்டும். தி.மு.க அரசு செய்த குற்றங்களை எல்லாம் ஒப்புக் கொண்டால் அதை எதிர்காலத்திலாவது சரி செய்வதற்கு டெல்லிக்கு அழைத்துப் போகிறோம்’ என்கிறார். இதை விட திறந்த மன நிலையில் யார் இருக்க முடியும்” என்கிறார் புரட்சி கவிதாசன்.
“எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பிரதமரோடு எந்த பிரச்னையும் இல்லை” என்கிறார் தி.மு.க செய்தி தொடர்பு இணை செயலாளர் இராஜீவ் காந்தி.
“ஒன்றியத்தின் பிரதம அமைச்சர் என்கிற முறையில் அவரிடையே கேட்பதற்கு மாநில அரசுக்குப் பல கோரிக்கைகள் இருக்கிறது. இந்த கோரிக்கைகள் ஒரு நாள் கோரிக்கைகள் இல்லை. அறை நூற்றாண்டு கோரிக்கை. கச்சத்தீவு மீட்பு என்பது அரசியல் சட்டத்திலேயே ஒன்றிய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தான் பெற முடியும் என்றிருக்கிறது. அதனால் தான் அந்த கோரிக்கை. கச்சத்தீவு கொடுத்தது நீங்கள் தான் என்கிறார்கள். முதல் ஒப்பந்தம் எமர்ஜென்சி நேரத்தில் போடப்பட்டது. அன்றைக்கு வாஜ்பாயும், தி.மு.க வும் எதிர்த்தார்கள். இரண்டாவது ஒப்பந்தம் போடும் போதும் எதிர்த்து சண்டை போட்டது தி.மு.க தான். இது வரைக்கும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கு அ.தி.மு.க, தி.மு.க இரண்டும் சேர்த்துத் தான் போட்டிருக்கிறது.
1972-ல் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது வருடத்தில் பா.ஜ.க-வின் தேசிய தீர்மானத்தில் இது குறித்துப் பேசவில்லையே. ஆட்சிக்கு வந்தும் எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இது குறித்து ஒரு கடிதமாவது எழுதியுள்ளார்களா? இது ஒன்றிய அரசின் பட்டியலில் வர கூடியது. மாநிலக் கட்சியாக இருந்து கோரிக்கை தான் வைக்க முடியும். கடந்த காலத்தில் பாதுகாப்பு பிரச்னை என்று சொன்னீர்கள். இன்றைக்கு சூழலில் ஒன்றிய அரசு அதிகப்படியான நிதி இலங்கைக்கு கொடுத்திருக்கிறது. நீங்கக் கோரி பெறலாம் என்கிறோம். இதில் என்ன அரசியல் இருக்கிறது? இதைத் தானே கோரிக்கையாக வைத்திருக்கிறோம்.
அடுத்து, ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டின் நிதி அமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் கையெழுத்துப் போடும் போது எங்களுக்கு இழப்பீடு வேண்டும் என்று சொன்னார். ஆனால், இது வரைக்கும் முழுமையான இழப்பீடு தொகை கொடுக்கப்படவில்லை. வரி வாங்கும் எல்லா இடங்களையும் ஒன்றிய அரசு வைத்துக் கொண்டு, மாநில அரசு வரி வருவாய் இல்லாத சிக்கல்களில், ஒன்றிய அரசு கொடுக்கும் நிதியை வைத்துத் தான் அரசு நடத்த முடியும். போதிய நிதி வரவில்லை. முதல்வர் டெல்லியில் நேரடியாகப் போய் கோரிக்கை வைத்தார். பல்வேறு முறை கடிதம் மூலமாகவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
பிரதமர் தமிழ்நாடு வரும் போது எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அதை முன் வைத்தோம். நிகழ்வு ஆரம்பிக்கும் போது 31,00 கோடி நலத்திட்ட உதவிக்கு நன்றி என்று சொல்லி தான் ஆரம்பித்தார். ஆனால், எங்கள் கோரிக்கைகள் வைக்காமல் இருக்க முடியாது. சமீப காலமாக ஜி.எஸ்.டி நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றிய அரசு தலையிடு அதிகமாக இருக்கிறது. ஆனால், எந்த திட்டமும் தொடர்ச்சியாகச் செய்து முடிக்கவில்லை.
`ஒன்றிய அரசு’ என்பது அரசியல் அமைப்பு ரீதியாக வழங்கப்படுகிற சொல். நாங்கள் தான் அரசியல் அமைப்பு ரீதியாக கையாள்கிறோம். இதை அவர்கள் அரசியலாகப் பார்க்கிறார்கள். இது அரசியல் இல்லை. அரசியல் சட்டம் கொடுத்திருக்கக் கூடிய உரிமை. எனவே மேடையில் பிரதமரை எந்த அவமரியாதையும் படுத்தவில்லை. அவமரியாதை என்று சொல்வதே தவறு. ஏனென்றால் அரசு சார்பிலும், பா.ஜ.க சார்பிலும் முழுக்க முழுக்க எல்லா வரவேற்பும் பிரதமருக்குக் கொடுக்கப்பட்டது. ஒரு கோரிக்கை வைப்பது அவமரியாதையாகப் பார்த்தால் எப்படி? சமூக நீதி, பெண் உரிமை, மாநில உரிமை… போன்ற விஷயங்களுக்குப் பிரதமர் பேச வேண்டும், எழுத வேண்டும், எங்களுக்காக வாதாட வேண்டும் என்று இந்த மாநில மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். அப்படிதான் இந்த மேடைப் பேச்சைப் பார்க்க முடியும்” என்கிறார் இராஜீவ் காந்தி.